கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பகலவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் குறித்தும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட விபரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி விரைவில் கிடைத்திட ஏதுவாக துணை கண்காணிப் பாளர் நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முன்மொழிவு அனுப்பிட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாவண்ணம், வன்கொடுமை அதிகளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட வேண்டும், வன்கொடுமைகள் ஏற்படாதவாறு காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கவியரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம், கோட்டாட்சியர் பவித்ரா, டிஸ்பிகள் ரமேஷ், பழனி, மகேஷ், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம், அரசு சிறப்பு வழக்கறிஞர் தண்டபானி, நகராட்சி ஆணையர் குமரன், தனி வட்டாட்சியர்கள் ராஜ், மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
