உத்தரப்பிரதேசத்தில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வாக்குவாதத்தில் ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டதில், ராணுவ வீரர் தன் கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பரேலி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. திப்ருகர்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகர் சுபன் போருக்கும், ராணுவ வீரர் சோனு என்பவருக்கும் டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதத்தின்போது கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர், பரேலி ரயில் நிலைய 2-வது நடைமேடையில் ரயிலிலிருந்து ராணுவ வீரரைத் தள்ளிவிட்டதில், ரயிலுக்கடியில் ராணுவ வீரர் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராணுவ வீரர், உடனடியாக அங்கிருந்த ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து பேசிய ரயில்வே போலீஸ் அதிகாரி அஜித் பிரதாப் சிங், “ராணுவ வீரர் தன் கால்களை இழந்து, கவலைக்கிடமான நிலையிலிருக்கிறார். இதில், டிக்கெட் பரிசோதகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307-ன்(கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.