திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வெள்ளிவாயல்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (26). விழிச்சவால் மாற்றுத்திறனாளியான இவர், தமிழகத்தின் முன்னணி `பாரா ஜூடோ’ வீராங்கனைகளுள் ஒருவர். மகேஸ்வரியின் தாய், தந்தை, தங்கை என அவர் குடும்பத்தில் அனைவருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள்தான். ரயிலில் தட்டுதடுமாறியபடி கடலை மிட்டாய் விற்றுவரும் மகேஸ்வரியின் தந்தை முருகனும், அவர் மனைவி சாமந்தியும், போராட்டக்களமான தங்கள் வாழ்க்கையில் இரு மகள்களையும் மூச்சைப் பிடித்தாவது கரையேற்றிவிடவேண்டும் என்பதில் மிகவும் தீர்க்கமாய் இருந்தனர். உடல்நலக் குறைபாடுகளும், பொருளாதார பின்னணியும் தங்கள் பிள்ளைகளின் கல்வியை பாதித்து விடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாய் இருந்து, அவர்கள் இருவரையும் இரண்டு டிகிரிகள் படிக்க வைத்து கல்வியின் வாசனையை நுகர்ந்த முதல் பட்டதாரிகளை அவர்களின் தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

முருகனின் மூத்த மகள் மகேஸ்வரி, சிறு வயது முதலே ஜூடோ விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாக படிப்புடன் தன்னுடைய விளையாட்டிலும் தொடர்ந்து தேறிகொண்டே வந்தார். M.A ஆங்கிலம் படித்திருக்கும் மகேஸ்வரி மாநில, தேசிய, சர்வதேச அளவில் `பாரா ஜூடோ’ போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த நிலையில், ஏற்கெனவே பொருளாதாரரீதியாக அல்லல்பட்டுக் கொண்டிருந்த மகேஸ்வரியின் குடும்பம், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரிதவிப்பின் உச்சத்துக்கு தள்ளப்பட்டது. கொரோனா காரணமாக தந்தை முருகனின் ரயில் கடலை மிட்டாய் வியாபாரம் முடங்கிப் போக, அந்தக் குடும்பமே நிர்கதியான நிலைக்கு வந்தது.
சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத் தந்த பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி, வாழ்வாதாரம் இழந்து நிர்கதியான நிலையில், தான் உணவுக்கே வழியில்லாமல் வறுமையுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும், சீனியர் வீராங்கனையான தனக்கு அரசாங்க வேலை வழங்கி உதவுமாறும் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். மனுவுக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகேஸ்வரி குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தோம்.

தங்களின் பழைய வீடு இடிந்து விட்டதால், தொண்டு நிறுவனத்தினர் அமைத்துக் கொடுத்த ஓலை குடிசையில் ஒடுங்கி கிடந்த அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் நிலைமையைக் கேட்டறிந்தோம். நம்மிடம் பேசிய மகேஸ்வரியின் பெற்றோர், “வர்றது மழைக்காலம், இந்த ஓலை குடிசையில் இருக்கவே ரொம்ப பயமா இருக்கு. பாம்பு, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்குற இந்தப் பகுதியில குடிசையில் இருக்கவே ரொம்ப பயமா இருக்கு. நாங்க நாலு பேருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் என்பதால, பொழுது சாஞ்சிட்டாலே உசுர கையில புடிச்சுட்டு இருக்க வேண்டியதா இருக்கு.
எங்களோட நிலைமைய விவரிச்சு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கிட்ட பசுமை வீடு திட்டத்துல ஓர் வீடு கேட்டிருந்தோம். ஆனா அதிகாரிங்க, `வீட்டுக்கு பேஸ்மென்ட் போட்டுட்டு சொல்லுங்க, அதுக்கு பிறகுதான் நாங்க நிதி ஒதுக்கி கொடுப்போம்’னு சொல்லிட்டாங்க. மூணு வேளை உணவே எங்களுக்கு இல்லங்குற நிலைமையில, வீடு கட்டி பேஸ்மென்ட் போட காசுக்கு நாங்க எங்கப் போவோம்… வர்றது மழைக்காலம் ரொம்ப பயமா இருக்கு. எங்க மூத்த மகள் மகேஸ்வரி இந்தியாவுக்கு ஜூடோ விளையாட்டுல பல பதக்கங்களைப் பெற்று தந்துருக்கா. அதனால், அரசாங்கம் எங்களுக்கு உதவும்’னு நம்பி முதல்வர் ஸ்டாலினுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கிட்டயும் மனு கொடுத்துட்டு அவங்க பதிலுக்குக் காத்திருந்தோம்” எனத் தெரிவித்தனர்.

பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி குடும்பத்தின் நிலைமையை விவரித்து விகடன் இணையதளத்தில் கட்டுரை எழுதியிருந்தோம். மேலும், `மகேஸ்வரி குடும்பத்துக்கு உதவ முன்வருபவர்கள், தங்கள் ஆதரவு கரத்தை நீட்டலாம்’ என வாசகர்களாகிய உங்களிடம் அன்புக் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் விளைவு… மகேஸ்வரி குடும்பத்திடம் உங்கள் மூலம் பெரும் தொகையை கொண்டு சேர்த்தது விகடன்.
மேலும், நம் கட்டுரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் சென்றது. கட்டுரை வெளியான அடுத்த சில நாள்களில், ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் மகேஸ்வரியின் இருப்பிடத்துக்கு விரைந்தனர். ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பசுமை வீடு கட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கின. ஆனால், இடையே ஏற்பட்ட சிறு தொய்வின் காரணமாக அந்த பசுமை வீட்டை கட்டி முடிப்பதற்கு ஓராண்டுக்கு மேல ஆகிவிட்டது. விகடன் தந்த ஊக்கமும், நம் செய்தியின் தாக்கமும் மகேஸ்வரி தன் வீட்டை கட்டி முடிக்க பல வகைகளில் உதவியது.

இந்த நிலையில், கான்கிரீட் வீடு கனவு நிறைவேறி அந்தக் குடும்பம் தங்களுடைய புது வீட்டுக்குள் இன்று அடியெடுத்து வைத்திருக்கிறது. பெருங்கனவு பலித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த மகேஸ்வரியை நேரில் சென்று சந்தித்து வாழ்த்தினோம். நம்மிடம் பேசிய மகேஸ்வரியின் பெற்றோர், “ரொம்ப வருஷமா அரசு அதிகாரிங்க கிட்ட உதவி கேட்டு போராடிட்டு இருந்தோம். முதல்வர், மாவட்ட ஆட்சியர்’னு மேல் மட்டத்துல இருந்து கீழ் மட்டத்துல இருக்க அதிகாரிங்க வரைக்கும் எல்லார்கிட்டயும் மனு கொடுத்தும்… எந்த உதவியும் கிடைக்காம ரொம்ப மன வேதனைப்பட்டோம்.
ஆனா, விகடன் எங்க நிலைமையை விவரிச்சு செய்தி வெளியிட்ட பிறகு எங்களுக்கு ஏராளமான உதவிகள் கிடைச்சுச்சு. மாவட்ட ஆட்சியரும் எங்க வீட்டுக்கே வந்து `உங்களுக்கு வீடு கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்குறோம்’னு சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரு. விகடன் மூலமா கிடைச்ச உதவி எங்களுக்கு வாழ்க்கை மீதான புது நம்பிக்கைய ஏற்படுத்திச்சு. பசுமை வீடு கட்டுமானப் பணிகள்ல சிறு, சிறு தொய்வுகள் ஏற்பட்டுச்சு, இருந்தாலும் ஒருவழியா எங்களோட பெருங்கனவு இன்னைக்கு பலிச்சருக்கு. ஆனா, எங்க மூத்த மகள் மகேஸ்வரிக்கு அரசாங்க வேலை கேட்டிருந்தோம்.

அது பத்தி இன்னும் யாரும் எதுவும் சொல்லல. அவளுக்கு ஓர் அரசாங்க வேலை கிடைச்சிட்டா, சந்தோஷமா இருக்கும். அரசாங்கம் அவளுக்கு நிச்சயம் ஒரு வேலை கொடுத்து உதவும்னு நம்புறோம். இருளடைந்து கிடந்த எங்க வாழ்க்கையில விகடன் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று’னு தான் சொல்லணும்” என்று மனம் நெகிழ்ந்தனர்.
இருளிலேயே வாழ்க்கையைக் கழித்து வரும் இந்த விழிச்சவால் கொண்ட தன்னம்பிக்கை மனிதர்களின் வாழ்க்கை நிச்சயம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில், இந்த முறை மனநிறைவுடன் கிளம்பினோம்.