விஜய்க்கும், அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. இது அனைவரது வீட்டுக்குள்ளும் நடப்பது போல் வழக்கமான ஒன்றுதான் என நினைத்திருக்க இந்த கருத்து வேறுபாடு விரிசலாக மாறி நீதிமன்றம்வரைக்கும் விஜய் சென்றார். இதனால் இந்த விவகாரம் மேலும் முற்றியது. இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகரின் பிறந்தநாள் வந்தபோதுகூட விஜய் தன் தந்தையை நேரில் சந்திக்கவில்லை. இது பலரை வருத்தத்திற்கு ஆளாக்கியது.
நிலைமை இப்படி இருக்க தனக்கும் விஜய்க்கும் வருத்தம் இருப்பது உண்மைதான் என சில பேட்டிகளிலும் சந்திரசேகர் கூறிவந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஏ.சி அளித்த பேட்டியில், “என் பையன் என்னை மதிக்கலைன்னு நான் எங்கயாச்சும் சொல்லிருக்கேனா? நான் ஒரு அனுபவம் வாய்ந்த மனிதன், என் வாழ்க்கையில் பல குடும்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன். எனது அனுபவங்களை மட்டுமே உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன்” என கூறியிருக்கிறார்.
அவரது இந்தப் பேட்டி தற்போது வைரலாகியிருக்கிறது. மேலும், விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இருந்த கருத்து வேறுபாடும், வருத்தங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருவதையே இது காட்டுகிறது அல்லது இருவருக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான முதல் விதையை எஸ்.ஏ.சி போட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 4ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி பேசியபோது, “ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி என்று இருக்கும்போதே பல பிரச்னைகள் வரும் அதனை சமாளிப்பதே கடினம்’ என கூறினார்.
இதனைக் கேட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பலமாக கைத்தட்டி சிரித்தனர். விஜய்யுடன் இருக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் சந்திரசேகர் திணறுவதையே இவ்வாறு கூறியிருக்கிறார் என பலர் தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி தேவையில்லாத மேடையில் தேவையில்லாததை எஸ்.ஏ.சி பேசியிருக்கிறார் எனவும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியது குறிப்பிடத்தக்கது.