ஷ்ரத்தா தலையை எரித்தாரா அப்தாப்? புதிய தகவலால் போலீசார் கடும் குழப்பம்!| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை தொடர்பான வழக்கில் வெளியாகும் புதுப்புது தகவல்களால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஷ்ரத்தாவின் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, அவரது தலையை, காதலன் அப்தாப் எரிந்து விட்டதாக புது தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப் அமீன் புனேவாலா, 28. இவர், மும்பையில் பணியாற்றியபோது ஷ்ரத்தா, 26, என்ற பெண்ணை காதலித்தார்; ஷ்ரத்தாவும் அவரை காதலித்தார்.

இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷ்ரத்தாவும், அப்தாபும் மும்பையை விட்டு வெளியேறி, புதுடில்லியின் மெஹ்ராவ்லி பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கியிருந்தனர்.

புதுடில்லியில் அப்தாபுக்கும், ஷ்ரத்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மே 18ம் தேதி ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை, 35 துண்டுகளாக வெட்டி ப்ரிஜில் வைத்தார்.

அடுத்த 18 நாட்களுக்கு தினமும் அதிகாலை 2:00 மணிக்கு எழுந்து, ஒவ்வொரு நாளும், உடலின் ஒவ்வொரு பாகமாக எடுத்து, புதுடில்லியின் பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார். ஷ்ரத்தாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்தாபை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை ப்ரிஜில் வைத்து, அப்தாப் அதை தினமும் எடுத்துப் பார்த்ததாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு மாதிரியான தகவல்கள் வெளியாகின்றன. ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவரது தலையை, அப்தாப் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், உடல் பாகங்களின் நாற்றம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, புதுடில்லியின் பல பகுதிகளிலும் அப்தாப் வீசி எறிந்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவரின் உடலை, மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற தகவலை, அப்தாப் இணையத்தில் தேடியதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

உடலை எவ்வாறு துண்டு துண்டாக வெட்டுவது என்பதை, டெக்சர் என்ற ஹாலிவுட் படத்தை பார்த்து, அப்தாப் தெரிந்து கொண்டதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை, நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு விட்டன. சில இடங்களில் இருந்து எலும்புகளை மட்டும் சேகரித்து உள்ளோம்; அது, ஷ்ரத்தாவின் எலும்புகளா என்பது மரபணு சோதனைக்குப் பின்பே தெரிய வரும்.

இருவருக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்து கொள்வதற்காக, ‘டேட்டிங் ஆப்’ எனப்படும் செயலியை ஆய்வு செய்து வருகிறோம்.

அப்தாபுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அதை ஷ்ரத்தா எதிர்த்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் புதுப்புது தகவல்களால் விசாரணையில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அப்தாபின் போலீஸ் காவல் மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.