புது டெல்லி: கடந்த அக்டோபர் வாக்கில் இந்தியாவில் டெலிகாம் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஜியோ நிறுவனம் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கியதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள் சொல்கின்றன. டவுன்லோட் மற்றும் அப்லோட் என இரண்டிலும் ஜியோ முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் வாக்கில் டவுன்லோட் வேகத்தை பொறுத்தவரையில் ஜியோ நிறுவனம் நொடிக்கு 20.3 மெகாபிட்ஸ் வேகத்தில் இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் டவுன்லோட் வேகம் நொடிக்கு 15.0 மெகாபிட்ஸ் என்றும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் டவுன்லோட் வேகம் நொடிக்கு 14.5 மெகாபிட்ஸ் என்ற அளவிலும் இருந்துள்ளது.
அப்லோட் வேகத்தை பொறுத்தவரையில் ஜியோ நிறுவனம் நொடிக்கு 6.2 மெகாபிட்ஸ் வேகத்தில் இயங்கி உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 0.2 மெகாபிட்ஸ் வேகம் குறைவாம். செப்டம்பரில் ஜியோ நிறுவனத்தின் அப்லோட் வேகம் நொடிக்கு 6.4 மெகாபிட்ஸ் என இருந்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் வோடபோன் ஐடியா நொடிக்கு 4.5 மெகாபிட்ஸ் என்றும், ஏர்டெல் நொடிக்கு 2.7 மெகாபிட்ஸ் என்றும் அப்லோட் ஆகியுள்ளது. மை ஸ்பீடு என்ற அப்ளிகேஷன் மூலம் இந்த தரவுகளை இந்தியாவில் டிராய் பெற்று வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை இன்னும் வழங்கவில்லை. அதனால் இந்த பிரிவிலிருந்து பிஎஸ்எனஎல்-லை டிராய் நீக்கியுள்ளதாக தெரிகிறது.