மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்றுடன் 50-வது நாளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போதும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருதாக படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
அமரர் கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதேபெயரில் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ரஹ்மான் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50-வது நாளை இந்தப் படம் நிறைவு செய்துள்ளது. மேலும் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’, அதன்பிறகு வந்த ‘லவ் டுடே’, ‘காஃபி வித் காதல்’, ‘நித்தம் ஒரு வானம்’ ஆகியப் படங்களை தாண்டியும் தற்போதும் இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானபோதும், இந்தப் படத்திற்கு திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் குறையவில்லை. இதன்காரணமாக இந்தப் படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் ‘2.0’ படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கமலின் ‘விக்ரம்’ படம் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் 227.04 கோடி ரூபாய் வசூலித்து முதல் இடத்தில் உள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Glorious days of #PonniyinSelvan & still going strong! br>
Watch it now in theatres near you & @PrimeVideoIN #PonniyinSelvan1 #PS1 #ManiRatnam #ARRahman @LycaProductions @MadrasTalkies_ @arrahman @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/WB7VKygFeH— Lyca Productions (@LycaProductions) November 18, 2022