Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று?

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுமா? ஆன்டிபயாடிக் சாப்பிட ஆரம்பித்த பிறகு எத்தனை நாள்கள்வரை ஒருவர் தொற்றைப் பரப்புபவராக இருப்பார்?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

நிமோனியா என்பது நுரையீரலில் வரக்கூடிய தொற்று. நம்முடைய சுவாசக் குழாய்களின் கீழ் நீர்க்குமிழிகள் போல காற்றுப் பைகள் இருக்கும். தொற்றினால் ஏற்படும் வீக்க நிலையால் அந்த இடத்தில் அதிக நீர் கோத்துக் கொண்டு நாளடைவில் பழுப்பாக மாறி காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் போகும் நிலையை தான் நிமோனியா என்கிறோம்.

நிமோனியாவில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை வைரல் நிமோனியா, பாக்டீரியல் நிமோனியா மற்றும் ஃபங்கல் நிமோனியா ஆகியவை. இந்த மூன்றிலும் வைரல் நிமோனியா என்பது பரவலாகக் காணப்படுவது.

பொதுவாக நிமோனியா என்பது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. அது அடினோ வைரஸ் அல்லது ரைனோ வைரஸ் என எதனாலும் ஏற்படலாம். வைரல் நிமோனியா தாக்கும்போது நம் உடலில் சளி, இருமல் போன்றவை பாதிக்கும். வைரல் நிமோனியா பாதித்த பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மையைப் பொறுத்து அது குணமாகும்.

Fever

தொற்று பாதித்த மூன்று நாள்களுக்கு நாம் மற்றவர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்பும் நிலையில் இருப்போம். அதை அடுத்து நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்து தொற்றின் பாதிப்பு ஓரளவு கட்டுப்படும். வைரல் நிமோனியா பாதிப்புக்கு உள்ளான சிலருக்கு அது பாக்டீரியல் நிமோனியாவாகவும் மாறலாம். பாக்டீரியா கிருமியினால் ஏற்படக்கூடிய இந்த வகை நிமோனியா தொற்று சரியாக சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் மோசமாக மாற வாய்ப்புகள் உண்டு.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா, நியூமோகாக்கல் நிமோனியா என நிறைய வகை உண்டு. இவற்றில் நியூமோகாக்கல் நிமோனியா என்பது நாம் பரவலாகப் பார்க்கக் கூடியது. இந்த வகை நிமோனியா தொற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும். எந்த வகை நிமோனியா தொற்றுக்கு எந்த வகையான ஆன்டிபயாட்டிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்வார். நோயாளியின் நோய் தீவிரம்,எக்ஸ்ரே ரிப்போர்ட் ரத்தத்தில் தொற்றின் தாக்கம் போன்றவற்றைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு ரத்தத்தை கல்ச்சர் டெஸ்ட் செய்தும் உமிழ்நீரைப் பரிசோதனை செய்தும் எந்த வகையான கிருமித்தொற்று தாக்கி இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

cold and fever

ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியதுமே அந்த நபர் தொற்றை அடுத்தவருக்குப் பரப்புவதில் இருந்து தடுக்கப்படுகிறார். அதேபோல அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொண்டு முடிக்கும்போது அவர் அந்தத் தொற்றின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டிருப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.