சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் ‘Golden Foot’ விருதை 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ கத்தாரில் நாளை (20.11.2022) நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “அதிகபட்சமாக இரண்டு மூன்று வருடங்கள் விளையாடுவேன். 40 என்பது சரியான வயதாக இருக்கும். அதனால் அப்போது எனது கால்பந்து வாழ்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் தெரியவில்லை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று. சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைக்காக ஒரு விஷயத்தை நீங்கள் திட்டமிட்டு இருப்பீர்கள். ஆனால் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது” என்று பேசியிருக்கிறார்.

பின் அவரிடம், “கத்தார் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் – அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன. நீங்களும் மெஸ்ஸியும் தலா 2 கோல் அடித்து இருக்கிறீர்கள். 94வது நிமிடத்தில் நீங்கள் மீண்டும் அடிக்கும் கோலுடன் கோப்பை போர்ச்சுல் வசம் ஆகிறது. அப்போது உங்களது மனநிலை எப்படி இருக்கும்” என்று விளையாட்டாக ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “எனது அணி உலகக்கோப்பையை வென்றால் களத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக நான் இருப்பேன். அத்துடன் எனது கால்பந்து வாழ்க்கையையும் முடித்துக்கொண்டு ஓய்வுபெற்று விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.