பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பாலத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். கட்டுமானப் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பாலம் அமைக்கும் போதே இரண்டு முறை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியத்துடன் கட்டுமான பணிகள் நடந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அகுவானிகாட் பகுதியில் கட்டப்பட்ட பாலம் மழையில் இடிந்து விழுந்தது. ஜூன் மாதம் சஹர்சா பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் தற்போது மேலும் பாலம் இடிந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
newstm.in