தமிழகத்தில் கறவை மாடு வைத்திருப்போர் தங்களது மாடுகளை பராமரிப்பதற்காக ரூ.14,000 வரை வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் அரசு சார்பில் கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் 69 ஆவது கூட்டுறவு விழா தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் கூட்டுறவு சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டுவருக்கு கேடயங்களையும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது விழா மேடையில் பேசிய அவர் “கூட்டுறவே நாட்டுறவு என்ற உயர்ந்த கொள்கையை கொண்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த போது தான் விவசாய பெருமக்களுக்கு ஆறு மாதத்துக்குள் திரும்பித் செலுத்தும் வகையில் வட்டியில்லா கடன் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தியும் காட்டினார்.
விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் பயனடைவதற்கு கூட்டுறவு சங்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கறவை மாடு வளர்ப்போர் தங்கள் மாடுகளை பராமரிப்பதற்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14,000 ரூபாய் வரை வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படுகிறது.
கடன் உதவி தேவைப்படும் கால்நடை வளர்ப்போர் ஒரு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடை பராமரிப்பிற்கான நிதி உதவி பெற்று பயன்பெறலாம். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுமார் 7000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 சவரன் வரையிலான சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கும், ஏழை எளியோருக்கும், தொழிலாளர்களுக்கும் பயன்பெறும் வகையில் எளிதில் கடன் உதவி கிடைப்பது கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே. அவ்வாறு பெறப்படும் கடன் உதவிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தினால் கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாக செயல்படும். எனவே கடன் வாங்கும் பயனாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த முன் வர வேண்டும்” என நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.