கார்ப்பரேட்களின் ஆட்டத்தை கலைத்த 'கலகத் தலைவன்' வென்றானா? இல்லையா? #திரைவிமர்சனம்

கார்ப்பரேட் நிறுவனம் செய்யும் மோசடிகளை வெளிக்கொண்டுவரும் நாயகன் மற்றும் அவரது கூட்டத்தை கூண்டோடு அழிக்க ஒருவர் கிளம்ப அவரிடமிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள்? என்பது தான் மகிழ் திருமேணியின் ‘கலகத் தலைவன்’.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான வஜ்ரா புதிதாக ஒரு வாகனத்தை வெளியிட திட்டமிடுகிறார்கள். ஆனால், அந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற இருப்பது செய்தியாக வெளியேறிவிடுகிறது. சங்கிலித்தொடர் போல தொடர்ச்சியாக வஜ்ரா நிறுவனத்தின் தகிடுதத்தம்களை கசியவிடுவது யார்? என்கிற கேள்வி அதன் பாஸுக்கு எழ, அதைக் கண்டுபிடிக்க ஆரவ் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கிறார். தனக்கே உரித்தான கொடூர குரூரான பாணியில் ஆரவ் விசாரணையைத் தொடங்க அது வந்து முடியும் இடம் உதயநிதி.

ஆரவிடமிருந்து உதயநிதி & டீம் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் மீதிக் கதை. இதற்கிடையே கார்ப்பரேட் அத்துமீறல், இயற்கை வள சுரண்டல், வேலை இழப்புகள், அரசாங்க மோசடி என நிகழ்காலத்தில் நடக்கும் பல விஷயங்களை ஆங்காங்கே மெல்லிய சாரல் போல தூவினால், ‘கலகத் தலைவன்’ வந்துவிடுவான்.

image

8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கெட்டப், தற்போது ஒரு கெட்டப் என இரண்டு வேடங்களில் உதயநிதியும், நிதி அகர்வாலும். காமெடி, டான்ஸ் என உதயநிதிக்கு வழக்கமாய் கைகொடுக்கும் எதுவும் இந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நிமிர், மனிதன், நெஞ்சுக்கு நீதியைத் தொடர்ந்து இன்னுமொரு அழுத்தமான படம் உதயநிதிக்கு. அந்த 8 ஆண்டுகளுக்கு முன் என்பது எதற்காக என்பதில் போதிய அழுத்தம் இல்லாததாலும், ரிமோட்டை வைத்து அவற்றை ஓட்ட முடியாத வண்ணம் திரையில் அமர்ந்து பார்ப்பதாலும், நாமும் வேறு வழியின்றி அவற்றைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

image

கலையரசன் தன் பெரும்பாலான படங்களில் எதற்காக வருகிறாரோ, அதே வேலைக்காக இந்தப் படத்திலும் வருகிறார். இடைவேளை வரை கலைக்கு எதுவும் ஆகவில்லை என நாம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அந்த பழக்கமான சம்பவம் நடந்தேறிவிட்டது. ஏன் பாஸ் இப்படி?. எதிர்மறை கதாபாத்திரமாகவே இருந்தாலும் படம் முழுக்க வருவது என்னவோ ஆரவ் தான். அந்த வகையில் ஆரவுக்கு நல்லதொரு வேடம். என்ன வாய்ஸ் மாடுலேஷன் எல்லாம் செய்து முரட்டு வில்லன் என நிறைய மெனெக்கெட்டு இருக்கிறார். ஆனாலும், அப்பாவிக்கான முகம் தான் ஆரவுக்கு வாய்த்திருக்கிறது.

image

ஆக்ஷன் த்ரில்லரில் வன்முறையை அழகியலோடு காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவராகி வருகிறார் இயக்குநர் மகிழ் திருமேணி. ரயில் காட்சியும், தொழிற்சாலைக்குள் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சியும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. இங்கே அரசு இயந்திரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகச் செய்துகொள்ளும் சின்ன சின்ன சமரசங்கள்கூட மக்களை மீளாத் துயருக்குக் கொண்டு சென்றுவிடும் என்பதை சங்கிலித் தொடர் போல பல்வேறு காட்சிகளை இணைத்து திரைக்கதையாக்கியிருப்பது புத்திசாலித்தனம்.

தன் முந்தைய படங்களைப் போலவே இதிலும் பிறரைத் துன்புறுத்தும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் பழக்கமில்லாதவை தான். ஆனால், யார் என்றே தெரியாத கதாபாத்திரங்களைக்கூட குரூரமான துன்புறுத்திக்கொண்டே இருப்பது பார்வையாளனுக்கு அசூயையைத் தவிர எந்தவித பரிதாபத்தையும் கடத்திவிடாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளுதல் நலம். ஏனெனில் ஏன் எதற்கு என்றே இல்லாமல், வெவ்வேறு பாணியில் துன்புறுத்தல் நடந்துகொண்டே இருப்பது கதை மீதான சுவாரஸ்யத்தைக் குலைத்துவிடுகிறது. அதே போல், தேவையே இல்லாமல் சம்பிரதாயமாய் நடந்துகொண்டிருக்கும் காதல் காட்சிகளும் போரடிக்கின்றன.

image

அருள் கொரேலியின் இசையில் பாடல்கள் கேட்க மட்டும் இனிமை. சண்டைக் காட்சிகளில் ஈர்க்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை, ரொமான்ஸ் காட்சிகளில் எரிச்சலூட்டுகிறது. தில்ராஜின் ஒளிப்பதிவும், ராமலிங்கத்தின் கலை இயக்கமும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

image

சின்ன சின்ன லாஜிக் மீறல்களையும், ரொமான்ஸ் காட்சிகளையும் கவனித்து இருந்தால் `கலகத் தலைவன்’ உண்மையிலேயே கலகம் செய்திருப்பான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.