நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியில் உள்ள ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்க வருகிறது. இந்த ஆலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் தயார் செய்யப்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் எட்டு பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் உள்ள அபாய சங்கு ஒலித்ததனால் தொழிற்சாலையில் பணியில் இருந்த அனைவரும் வெளியேறினார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அருவங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வெடி விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.