புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று நடைபெற்றது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: ‘‘புதுச்சேரியில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக இயங்கியது. தனியார் அதிக லாபம் ஈட்டக்கூடிய பெட்ரோல் பங்க், மதுபான கடைகள் ஆரம்பிக்க பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியார் மதுபான கடைகள் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் அருகில் உள்ள அரசு மதுபான கடைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது. இதனால் தான் மதுபான கடைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் மில் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது. ஆனால் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்துக்கு சென்றுள்ளன. இதற்கு ஊழியர்கள் தங்கள் பணியினை சரிவர செய்யாததுதான் காரணம்.
அரசு ஊழியர் என நாம் நினைக்கக் கூடாது. நாம் வேலைபார்த்தால்தான் நிறுவனம் சரியாக செயல்படும் என கருத வேண்டும். பல நிறுவன ஊழியர்கள் இப்போது ஏதாவது ஊதியம் கொடுங்கள் என கேட்கின்றனர். வயிறு காய்ந்தவுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அரசு நிதி ஒதுக்கி, லாபத்தில் இயங்கியபோதே நன்றாக வேலை செய்திருந்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது. கூட்டுறவு நிறுவனம், சங்கங்களை சேர்ந்தவர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் நிறுவனத்தை நன்றாக செயல்படுத்த முடியாது. நிறுவனம் நன்றாக செயல்படாவிட்டால் 30 மாதம், 40 மாதம் சம்பள பாக்கி ஏற்படத்தான் செய்யும். நிறுவனங்களின் இந்த செயல்பாடால் கூட்டுறவு வங்கிகளும் நலிவடைந்துள்ளன. ஊழியர்களும், நிர்வாகத்திற்கு வருபவர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால்தான் கூட்டுறவு நிறுவனங்களை செயல்படுத்த முடியும்.
சிறப்பாக செயல்பட்ட பாண்லே நிர்வாகத்திலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை சிறப்பாக கொண்டுவர முடியும். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற வேண்டும். நான் சொல்வது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை உழைப்பால் உயர்த்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.