சாவர்கர் விவகாரம்: “இந்திரா காந்தி, மகாத்மாவின் கடிதத்தை படியுங்கள்" – ராகுலுக்கு பட்னவிஸ் அறிவுரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் உள்ளது. நாளை மத்திய பிரதேசத்திற்குள் செல்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுதந்திர போராட்ட தியாகி வீர் சாவர்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கள் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. ராகுல் காந்தி தொடர்ந்து இது போல் பேசினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. ராகுல் காந்தியின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாவர்கருக்கு எதிரான கருத்துக்காக ராகுல் காந்தி மீது மும்பை அருகேயுள்ள தானேயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி எழுதிய கடிதம்

இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில், `ஐயா நான் உங்களின் மிகவும் கீழ் படிந்த வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சாவர்கர் எழுதிய கடிதத்தின் கடைசி வரிகளை படிக்க சொல்லும் ராகுல் காந்தி, உங்களின் மதிப்பிற்குறிய மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தின் கடைசி வரிகளையும் படியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மகாத்மா காந்தி 1920-ம் ஆண்டு எழுதியாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மேலும் 1980ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதம் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் இந்திரா காந்தி, சுதந்திர போராட்டதில் வீர் சாவர்கர் தூணாக செயல்பட்டதாகவும், இந்தியாவின் மதிப்பு மிக்க மகன் என்றும் குறிப்பிட்டு இருப்பதை பட்னவிஸ் சுட்டிக்காட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், சரத்பவார் ஆகியோரும் சாவர்கரை பாராட்டி இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார். பிரச்னை பெரிய அளவில் சர்ச்சையாகி இருப்பதால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “சாவர்கரை ராகுல் காந்தி தாக்கிப்பேசவில்லை. வரலாற்று உண்மைகளை எடுத்துக்கூறினார்” என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே சாவர்கரின் கொள்கையால் கவரப்பட்டவர். சாவர்கரின் கொள்கை காந்தியின் கொலைக்கு காரணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.