சிதிலமடைந்த நிலையில் காணப்படும்; மேலப்பாவூர் சிற்றாறு கால்வாயில் புதிய பாலம் கட்டப்படுமா?

பாவூர்சத்திரம்:  பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் மேற்கு பகுதியில் மேலப்பாவூர் கால்வாய் பத்து அமைந்துள்ளது. இங்கு குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன் சிற்றாறு கால்வாயில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த குறுகிய பாலத்தின் வழியாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு விவசாய இடுப்பொருட்கள் கொண்டு சென்றனர்.

இந்த பாலம் கட்டி பல ஆண்டுகளாக ஆகியதால் பாலத்தின் தடுப்பு சுவர் இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் அஸ்திவாரம் பலமிழந்த நிலையில் எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் காணப்படுகிறது. இந்த பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் விவசாய இடுப்பொருட்களை கொண்டு செல்வதற்கு விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இப்பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தலையில் சுமந்து கொண்டு இரண்டு கிலோ மீட்டர் வயல் வரப்பில் மேலப்பாவூர் மேலக் கிராமம் வழியாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் விவசாயிகள் தங்களது பணிகளை முடித்து மாலையில் வீடு திரும்பும்போது இப்பாலத்தை கடக்கும் போது சில நேரங்களில் தடுமாறி கால்வாயில் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் விவசாயிகள் தட்டுத்தடுமாறி தண்ணீருக்கு விழுந்து காயங்களோடு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வருபவர்களும் குறுகிய பாலத்தை கடந்துதான் வர வேண்டும். அவர்கள் பல நேரங்களில் தடுமாறி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க கோரி பல முறை கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகளின் தெரிவித்தனர். இப்பாலத்தால் உயிர்ப்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சேதமடைந்த இப்பாலத்தை உடனடியாக அகற்றி புதிதாக கனரக வாகனங்கள் செல்வது போல் பாலம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.