நாகர்கோவில்: ரூ.4 கோடியில் படகு உணவகம், அலங்கார பசுமை நடை பாதைகள், சைக்கிள் பயிற்சி பாதைகளுடன், புத்தேரி பெரிய குளம் சுற்றுலா மையமாக உருவாக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மிகவும் குறுகலான நெருக்கடியான நகரம் என்பதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போதுமான இடம் இல்லை. அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டாலும், அங்கும் அடிக்கடி பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை.
பொதுமக்கள் பொழுது போக்க வேண்டும் என்றால், வேப்பமூடு சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா மட்டுமே உள்ளது. இந்நிலையில், குமரியின் பெரிய குளங்களில் முக்கியமான குளமான புத்தேரி குளம் தற்போது தண்ணீர் மாசுபட்டு அசுத்தமாக காணப்படுகிறது. புத்தேரி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்னர், மேற்கு தொடர்ச்சி மலைகள், பச்சை பசேல் வயல்கள் பின்னணியில் ஏரி போல் காணப்படும் புத்தேரி பெரிய குளத்தில் மக்கள் பொழுதுபோக்கும் வகையில் விளையாட்டு மைதானம், பூங்கா அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாநகராட்சி முதல் மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும், புளியடியில் ஆய்வு செய்த போது, புத்தேரி குளத்தில் படகு சவாரி விடுவதுடன், பூங்கா அமைக்க நிதி வசதி ஏற்படுத்தப்படும் என கூறியிருந்தார். இதற்காக அதிகாரிகளிடம் திட்டமதிப்பீடு செய்யவும் கூறியிருந்தார். இதன்படி தனியார் ஆர்க்கிடெட் நிறுவனம் மூலம் புத்தேரி குளத்தில் பொழுது போக்கு பூங்கா உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை தனியார் நிறுவனம் அளித்த வரைபடத்தின் படி, புத்தேரி ரயில்வே மேம்பாலம் கீழே புத்தேரி பெரிய குளத்தின் மறுகால் பாயும் பகுதியில் இருந்து, ரயில்வே சுரங்கப்பாதை வழியாக பாலத்தை கடந்து குளக்கரை வழியாக பொன்னப்ப சாஸ்தா ஆலயம் வரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து, கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு செயற்பொறியாளர் ராஜா, 11வது வார்டு கவுன்சிலர் லிஜா, நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் முதல் கட்ட பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளையும் நேரில் பார்த்து ஆலோசனை நடத்தினர். அப்போது பாசனத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில், குளத்தின் நீர்பிடிப்பு பகுதி அளவு மாறாமல் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக புத்தேரி குளத்தின் மறுகால் பகுதியில் வாகன நிறுத்தும் இடமும், இதனையடுத்து உணவு விடுதி மற்றும் பூங்கா, அதனையடுத்து, படகு தங்குதளம், அதனை தொடர்ந்து பசுமை அலங்கார நடை பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் பொன்ன சாஸ்தா கோயில் வரை 0.98 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்படுகிறது. மேலும் படகு உணவகம் செயல்படுத்தப்படும். 2வது கட்டமாக குளத்தை சுற்றி நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்ய பாதைகள் 3.5 கி.மீ தொலைவிற்கு மேம்படுத்தப்படும்.
இதில் நடைபயிற்சி பாதையில் இருபுறமும் சிறு மரங்கள், செடிகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.4 கோடிக்கு உத்தேச திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட பணிக்கு, மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தில் ரூ.80 லட்சமும், தமிழக அரசின் நிதியாக ரூ.80 லட்சம் என ரூ.1.6 கோடியில் முதல் கட்டபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவிலின் அடையாளமாக திகழும்
இந்த பூங்கா அமையும், மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் லிஜா கூறியதாவது: திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தபோது நாகர்கோவில் அதன் தலைநகராக இல்லாவிட்டாலும், நாகர்கோவிலே மையமான நகராக இருந்தது. மிகவும் பாரம்பரியம் மிக்க நாகர்கோவிலில், நாகராஜா கோயில், அதன் மகாமேரு மாளிகை, மணிக்கூண்டு என பல வரலாற்று முக்கியம் வாய்ந்த அழகிய அடையாளங்கள் இருந்தாலும், இயற்கையிலேயே காண்பவரின் உள்ளங்களை கவரும் இயற்கை காட்சிகள் நிறைந்த புத்தேரி பெரிய குளத்தில், தற்போது அமைய உள்ள பொழுதுபோக்கு பூங்கா, படகு உணவகம், அலங்கார பசுமை நடைபாதை, அலங்கார 4வழிசாலை பாலம் ஆகியன அமைவது மாநகர மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்ட மக்களையும் கவரும் வகையில் சுற்றுலா தளமாக உருவாகி நாகர்கோவிலின் புதிய அழகிய அடையாளமாக மாறும்.
ஏற்கனவே புளியடியில் இக்குளக்கரையில், மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த திட்டம் வரும்போது, அந்த பூங்காவிற்கும் மக்கள் அதிகம் வருவதுடன், புளியடி மற்றும் கலுங்கடி பகுதியும் மேலும் பொலிவு பெறுவதுடன், வணிக வாய்ப்புகள் கிடைக்கும். இத்துடன் இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கையான விளையாட்டு பயிற்சி கருவிகளும் இந்த பகுதியில் அமைத்து தர கேட்டுக் கொள்கிறேன். இப்பூங்காவிற்காக நடவடிக்கை மேற்கொண்ட மேயர் மகேசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ரயில்வே அனுமதிக்கு பரிந்துரை
ரயில்வே சுரங்கப்பாதை வழியாக அமையும் நடைபாதையில் வண்ண விளக்குகள் பொருத்துவதுடன், குளத்தை முழுமையாக சுற்றி வரும் பாதைக்கு, ரயில்வே தண்டவாளம் பாலத்தின் அருகே இணையான பாலம் அமைக்க வேண்டும்.இதற்கு ரயில்வே துறை அனுமதி தேவை. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே பொறியாளர்களிடம் கலெக்டர் அரவிந்த் பரிந்துரை செய்துள்ளார்.
நான்குவழிச்சாலை பாலமும் கூடுதல் அழகு
புத்தேரி பெரியகுளம் வழியாக அமைய உள்ள 4 வழிச்சாலை பாலத்தில், அலங்கார மின் விளக்குகள், அலங்கார வளைவுகள் என காண்போரை கவரும் வகையில் அமைக்கப்படும் என நகாய் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த சாலை அமையும் போது இந்த பூங்காவிற்கு அது கூடுதல் அழகு சேர்க்கும்.
தண்ணீர் சுத்தமாக மாறும்
இத்திட்டம் காரணமாக புத்தேரிகுளம் சுத்தமானதாக மாற உள்ளது. தற்போது புத்தேரி பெரிய குளத்திற்கு பூதப்பாண்டியில் பழையாற்றிலிருந்து அரசியார் கால்வாய் வழியாக ஈசாந்திமங்கலம், நாவல்காடு வழியாக இறச்சகுளம் பெரிய குளம், மேல புத்தேரி நெடுங்குளம் என குளங்களுக்கு நீரை ஊட்டிவிட்டு இறுதியாக புத்தேரி பெரிய குளத்திற்கு வருகிறது. இதில் வரும்வழியில் வீடுகளில் கொட்டப்படும் குப்பைகள் காரணமாக தண்ணீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. தற்போது புத்தரி குளத்தில் பிடிஓ அளவு ( பயாலாஜிக்கல் டிஸ்ஸால்வ் ஆக்சிஜன்) 150 முதல் 200 ஆக உள்ளது.
இது மிகவும் மாசுபட்டதாகும். எனவே படகு சவாரி செய்பவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இதனை 20 பிடிஓவாக குறைக்கும் வகையில், மேலபுத்தேரி சாலை திருப்பம் அருகே வாய்க்கால் பகுதியில், சோபிட் முறையிலான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்குள் வரும். குளத்தில் ஆகாய தாமரைகள், ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவதுடன், குளத்தினை மாநகராட்சி நகர்நலத்துறை பராமரிக்க உள்ளது. இதனால், முன்புபோல் குளத்தில் குளிக்கலாம்.
* இதுதவிர குளத்திற்குள் ஆங்காங்கே ரொட்டேட்டர் எனப்படும் சுத்திகரிப்பான்களும் நிறுவப்பட உள்ளன. இவையும் நீரூற்றாக மக்களை கவரும் என்பதுடன் தண்ணீரையும் சுத்திகரிக்கும்.