பயிர் காப்பீடுக்கான அவகாசம் 21ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு நவம்பர் 15ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகள், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று காப்பீட்டுக்கான அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் தங்கள் பயிர்களை 21-ம் தேதி வரக்குள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விவசாய பயிர்காப்பீடுக்கான தேதி நவம்பர் 15ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பயிர்கள் கடும் சேதம் அடைந்தது. மேலும், மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, மின்சார பாதிப்பு மற்றும் பல்வேறு பாதிப்புகளால் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் அவதிப்பட்டன.

இதையடுத்து, விவசாயிகள் பயிர்க்காப்பீடுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மாநில, மத்தியஅரசுகளிம் கோரிக்கை வைத்தனர். மேலும் பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமருக்கு கடந்த வாரம் அவசர கடிதம் எழுதியிருந்தார்.

இதை மத்திய வேளாண்துறை ஏற்றுள்ளது.  இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டித்து இருப்பதாக அறிவித்து உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சனி (19.11.2022) மற்றும் ஞாயிறு கிழமையில் (20.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு. ராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களைச் சேர்ந்த  விவசாயிகள்  காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை,  அசல் வங்கிக் கணக்கு புத்தகம்,  கிராம நிர்வாக அலுவலரின் சான்று, கணினி சிட்டா ஆகியவற்றுடன் சென்று  ஏக்கருக்கு 525 ரூபாய் 75பைசா பிரிமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என  வேளாண்மை – உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.