சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அவ்தார் குழுமத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை நடந்தது.

இந்த விருது நிகழ்ச்சியில் இந்தியாவில் பெண்கள் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஏற்ற சிறந்த 100 நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விருது நிகழ்ச்சியில் இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கான நிறுவனங்களில் முதல் 10 இடத்தைப் பிடித்த நிறுவனங்கள்:
-
Accenture
-
Barclays
-
Citi
-
EY
-
Genpact
-
IBM
-
Infosys
-
Mastercard
-
Tech Mahindra
-
ZS
இந்த நிகழ்ச்சியை நடத்தும் அவ்தார் குழுமத்தின் தலைவர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், “இந்த விருது நிகழ்ச்சி அவ்தார் மற்றும் செரமவுண்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய நிறுவனங்களை கவுரவிக்கிறோம். அதில் பெண்கள் பணிபுரிய ஏற்ற முதல் 100 நிறுவனங்களுக்கு விருது வழங்குகின்றோம்.
ஒரு ஆண்டு முழுவதும் ஒரு நிறுவனம் பெண்கள் வளர்ச்சிக்கு உதவியது, பெண்கள் வேலையில் இருந்து இடைநிற்பதை தடுத்தது, பெண்களுக்குப் பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கியது போன்ற 16 காரணிகளை ஆராய்ந்து இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இது ஏழாம் ஆண்டு நடக்கும் விருது நிகழ்ச்சி ஆகும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் பேசியதாவது, “இந்த விருது நிகழ்ச்சி பன்முகத்தன்மை, சமத்துவம், ஒருங்கிணைப்பு (Diversity, Equity and Inclusion) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய சூழலில் கார்ப்பரெட் நிறுவனங்கள் இவை மூன்றையும் தங்களது நிறுவனங்களில் செயல்படுத்துவது மிக முக்கியமாகும்.
தமிழக அரசு சார்பிலும் திறன் மேம்பாட்டில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு பல தொழில் நிறுவனங்களின் கூட்டணி தேவைப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அமைத்து தரமுடியும். அதற்கான வாய்ப்பாக இந்த விருது நிகழ்ச்சி அமைந்து இருக்கிறது” என்று கூறினார்.
பெண் தொழில்முனைவோர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி கெளரவிக்கும்படியாக இருந்தது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி!