மதுரை மண்டலத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகளை கடந்த 2017-2018 ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதி ஆக்கி அரசுக்கு 27 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பரசன், மதுரை மண்டல மருத்துவ நிர்வாக அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கிராமப்புற மருத்துவ சேவை கண்காணிப்பாளர் அசோக் மற்றும் அமர்நாத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் 13 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்குவதற்கு பதிலாக 40 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்கியதாக போலி ஆவணம் தயாரித்தது அம்பலம் ஆகியுள்ளது. இந்த இந்த ஊழலுக்கு உடந்தையாக இருக்க மறுத்த மருத்துவ அதிகாரி கல்யாணி மீது குற்றம் சுமத்தி பணியிட மாற்றம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் மதுரை மண்டலத்தில் இருந்த மருத்துவர்கள் அதிகப்படியான மருந்துகள் தேவையில்லை என மருத்துவ அதிகாரியான ஜான் ஆண்ட்ரூ கவனத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
மருத்துவ அதிகாரியான கல்யாணி பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணத்துக்கு வழங்கப்பட்ட மெமோ மற்றும் பணியிட மாற்றத்திற்கு தடை விதித்திருந்தனர்.
மதுரை மண்டலத்திற்கு மருந்துகள் வாங்கிய தொடர்பாக அக்கவுண்ட் ஜெனரல் வரவு செலவு கணக்கு சரி பார்த்த போது மதுரை மண்டலத்திற்கு அதிகப்படியான மருந்துகள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சமன் அனுப்பப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்பு ஆஜராகும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.