புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகள் திட்டத்தைக் கொண்டு வரக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் அஸ்வனி குமார் கூறியதாவது:
நாட்டில் மக்கள் தொகை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கத்தைக் நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அதற்காக நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
ஆனால், எனது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற உத்தரவை நாட்டில் அமல்படுத்த வேண்டும். இதற்கேற்ப புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று மத்திய சட்டத் துறை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் கூறியதாவது:
நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிரச்சினையை மத்திய அரசு, மாநில அரசுகள் கவனித்துக் கொள்ளும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மக்கள் தொகை என்பது ஒரு நல்ல நாளில் நின்றுவிடக்கூடிய விஷயம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.