நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடி உள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது:
மத்திய அரசு ஏழை எளியோருக்கு பணம் இல்லாத வங்கி கணக்கு தொடங்குவதாக கூறி ஏழரை கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கினர். அதற்கு அவர்கள் ஒரு பைசா கூட ஏழை எளியோருக்கு வங்கி மூலம் அந்த கணக்கை தொடங்க வைத்தனர். ஆனால் தற்போது ஏழை எளியோருக்கு வங்கிக் கணக்கின் மூலம் வரும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வரும் ஊதியம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அவர்களுக்கு வரும் உதவித்தொகையில் இருந்து செல்கிறது. குறைந்தபட்ச பணம் இல்லை எனக் கூறி எளியோரிடம் இருந்து வங்கிகள் பணத்தை பிடுங்கும் பணியை தற்போது செய்து வருகின்றனர். இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
நாம் தமிழர் கட்சி சீமான் வழக்கம்போல் நேற்று உளறியுள்ளார். நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பற்றி இழிவாக அன்னை சோனியா காந்தியை குறித்து தவறாக பேசியுள்ளார். இதற்கு சீமானை வன்மையாக கண்டிக்கிறேன். வெறும் மூன்று சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு, அவர் தன்னை தமிழக குரலாக காட்டி கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஓரத்தில் நின்று கூச்சலிடும் கூட்டமாக தான் அந்த கூட்டம் இருக்கிறது. இந்தக் கூட்டம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் கூட்டமாக நான் பார்க்கிறேன்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஏழு பேர் விடுதலை சட்டவிரோதமானது தவறானது. இதனை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியினர் மனதில் அவர்களுக்கு இருந்த மரியாதை குறையும். அவர்கள் எங்களுடைய வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவர்களாகத் தான் நாங்கள் கருதுவோம், அது யாராக இருந்தாலும் சரி.
தற்போது பாஜகவில் அனைத்து ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் இணைந்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை என்றுமே மக்கள் மனதில் அவர்களுக்கு இடம் இல்லை. தமிழக மண் என்பது எப்போதுமே பாஜகவிற்கு எதிரானது. இது அனைவருக்கும் தெரியும். இங்கு பாஜக வளரவே வளராது. தொடர்ந்து டீசல், பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை ஏற்றதால் மக்கள் பாஜகவின் மீது அதிருப்தியாகத்தான் உள்ளனர். குஜராத் தேர்தலில் பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் துணையாக உள்ளது .மேலும் தற்போது ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது. எவ்வளவு தடை வந்தாலும் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.