வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் பிரதீப்(22), பதினாறு வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.