7 பேர் விடுதலை… மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் தமிழக ஆளுநர், அமைச்சரவையின் முடிவுக்கு பதில் சொல்லாமல் இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு நளினி உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் நிலை என்ன? என்பதை அவர்கள் குறிப்பிடாத காரணத்தாலும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அதற்கு எந்த பதிலும் சொல்லாத காரணத்தாலும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து மத்திய அரசானது தன்னுடைய தவறை உணர்ந்து அந்த வழக்கில் மறு சீராய்வு மனு போட வேண்டும் என்று நான் கடிதம் எழுதியிருந்தேன்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசானது ராஜீவ் காந்தி படுகொலையில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ததற்கு, மத்திய அரசின் விளக்கத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி அதில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள், அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் கிடையாது.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்தாலும்கூட, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்களும் மறு சீராய்வு மனுவில் கலந்துகொள்வோம்.

ராஜீவ் காந்தி படுகொலை நாட்டையே உலுக்கியிருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தார்கள் என்பதை காரணம் காட்டியும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்களை மன்னித்துவிட்டார்கள் என்று கூறியும் சர்வசாதாரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் விடுதலையை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இது மிகப்பெரிய வருத்தத்தை எங்களுக்கு அளிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தலைவரை இழந்த துக்கத்தில் நாங்கள் இருந்து வருகிறோம். பல குற்றவாளிகள் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி விடுதலை செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரையும் விட்டுவிடுவார்களா? இந்த நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு, ஜனநாயகத்துக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது. ஆகவே மறு சீராய்வு மனு கண்டிப்பாக கொண்டு வந்ததை வரவேற்கிறேன். அதை முறையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தி மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், “இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பை நேரடியாக எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு, சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை.

அதேபோல், வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்காத காரணத்தால்தான், அது தொடர்பான முக்கியமான ஆதார, ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்க இயலாமல் போனது. மத்திய அரசு தன் தரப்பு வாதத்தை எடுத்துவைக்காத காரணத்தால்தான் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என கோரியிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.