No Money For Terror: 'உலக அமைதிக்கு எதிரானது பயங்கரவாதம்!' – அமித் ஷா

பயங்கரவாதம் உலக அமைதிக்கு எதிரானது எனக் குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதனை வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்து விவாதிக்கும் சர்வதேச அளவிலான இரண்டு நாள் மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கிய மாநாடு இன்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று, இந்த மாநாட்டில் நிறைவு விழாவில் பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

ஜனநாயகம், மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அதனை வெற்றி பெற அனுமதிக்கக்கூடாது. சமீபத்தில், சமூக செயல்பாடுகள் என்ற போர்வையில், இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றவும், பயங்கரவாதத்தை நோக்கி தள்ளவும் செய்யும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.

இத்தகைய அமைப்புகளை, ஒவ்வொரு நாடும் அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதுடன், அவர்களுக்கு புகலிடம்

அளிக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு எந்த சர்வதேச எல்லையும் கிடையாது. எனவே, ஒவ்வொரு நாடும், அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.