நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் அமைப்பாக இந்த கவுன்சில் உள்ளது.
இதில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயன்று வருகிறது. இதற்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா.வுக்கான பிரான்ஸ் துணை பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஜெர்மனி, பிரேசில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கோரிக்கையை பிரான்ஸ் ஆதரிக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இதில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். சமச்சீரான புவியியல் பிரதிநிதித்துவத்தை அடையும் வகையில் மீதமுள்ள இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
பிரான்ஸின் இந்த நிலைப்பாடு நிலையானது மற்றும் நன்கு அறியப்பட்டதாகும். இன்றைய உலகை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் விளங்க வேண்டும்.
பேரழிவு அட்டூழியங்களை பொறுத்தவரை நிரந்தர உறுப்பு நாடுகள் சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்துவதை தாங்களாகவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிராட் ஹர்ஸ்ட் கூறினார்.