கீழக்கரை பகுதியில் கடல் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?; மீனவமக்கள் எதிர்பார்ப்பு

கீழக்கரை: கீழக்கரை பகுதியில் கடல் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்படுமா என மீனவமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கீழக்கரை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பண்டைய காலத்தில் கடல் சார் தொழிலில் சிறந்து விளங்கியது. இப்பகுதியில் அதிகமானோர் கடல் சார் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாசி சேகரித்தல், வலை பின்னுதல், சிப்பி பொறுக்குதல் போன்ற கடல் சார்ந்த தொழிலில் மீனவர்களும், மீனவ பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இப்பகுதி கடல் சார் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மரைன் போன்ற பட்டபடிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படித்து விட்டு இங்கு வேலை வாய்ப்பில்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். கல்வி நகரமாக திகழும் கீழக்கரை பகுதியில் தொழில் பேட்டை அமைக்க அரசோ அல்லது தனியாரோ முன்வருவதில்லை.

நீளமான‌ கடற்கரை பகுதியைக் கொண்ட கீழக்கரையில் கடல் சார்ந்த தொழில் துவங்க அரசு முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து கடல் சார் ஆர்வலர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், ‘‘கீழக்கரை மட்டுமில்லாமல் ஏர்வாடி, காஞ்சிரங்குடி, பெரியபட்டணம், எஸ்பி பட்டணம், தொண்டி, கன்னிராஜாபுரம் போன்ற கடலோர ஊர்களில் மீன்பிடி தொழிலில் ஏராளமான நாட்டு படகுகள், விசைப்படகுகள் ஈடுபடுகின்றன. இவைகளுக்கு பழுது ஏற்பட்டால் சிறு, சிறு மராமத்து மட்டுமே செய்யப்படுகிறது. கீழக்கரை போன்று ஏர்வாடி உள்ளிட்ட‌மற்ற கடலோர ஊர்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள தச்சு தொழிலாளர்களைக்கொண்டு நாட்டு படகுகள் செய்து வருகிறார்கள். ஒருபடகு கட்டுவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் அரசு முயற்சி மேற்கொண்டு படகு கட்டும் தொழிற்சாலை ஏற்படுத்தினால் பின்தங்கிய பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் இப்பகுதியில் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும்’’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.