நாமக்கல்: சென்னை, கோவை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23ல் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் அறிவித்து உள்ளார்.
இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு நிர்வாக கட்டமைப்பை தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்ட அரசாணை எண் 115-யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி டிச.23-ல் சென்னை, கோவை, மதுரை, சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய 7 மண்டலங்களில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தவது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.