
மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகந்தி தத்தா என்ற நபரின் பெயர், ரேஷன் கார்டில் ஸ்ரீகந்தி குத்தா என்று அச்சிடப்பட்டிருந்தது. குத்தா என்றால் ஹிந்தியில் ‘நாய்’ என்று பொருள்.
இந்த தவறை சரி செய்ய சொல்லி தத்தா பலமுறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது பெயரை சரி செய்யவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த தத்தா, அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்து ஆய்வு மேற்கொண்ட போது, தத்தா காரை மறித்து தனது கோரிக்கையை வித்தியாசமான முறையில் வைத்தார்.

குத்தா என்று அவர் பெயர் மாற்றியிருப்பதால் நாய் போன்றே குரைத்து தனது கோரிக்கை மனுவை அதிகாரியிடம் கொடுத்தார். அவரது நடவடிக்கையால் குழம்பி போயிருந்த அதிகாரி, பின்னர் மனுவை படித்துவிட்டு விரைவில் சரி செய்வதாக கூறிவிட்டு சென்றார்.
இது தொடர்பான வீடியோவை அங்கிருந்த பொதுமக்கள் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in