மங்களூரு வெடிவிபத்து : தமிழர் பெயரில் சிம் கார்டு… போலி ஆதார் அட்டை… சம்பவத்தின் முழு விவரம்!

கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று மாலை ஆட்டோ வெடித்த விபத்து தற்போது பூதாகரமாகியுள்ளது. அதாவது, மங்களூரு பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்த குக்கர் வெடித்து இந்த விபத்து ஏறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வெடி விபத்தில், ஆட்டோ ஓட்டுநரும் பயணி ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தை போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். 

விசாரணையில், எல்இடி போன்ற பொருள் வெடி விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் கிடைத்த ஒருவரின் ஆதார் அட்டையும் போலி என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்கையில், இது விபத்து இல்லை என்றும் ஒரு பயங்கரவாத செயலாக இருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில்,”தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளன, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலம்பெற்றவுடன் தொடர்ந்து அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். 

அதில் ஒருவர், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். மேலும், இவருக்கு ஏதும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு  இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. சுரேந்தர் உதகையில் உள்ள குந்தசப்பை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிகிறது.  

போலீசார் முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும். ஆட்டோ விபத்தில் சிக்கியவரிடம் போலியான ஆதார் அட்டை இருந்தது. அது ஹூப்ளி முகவரியில் இருந்தது” என்றார். 
 
அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் பெயர் முகமது ஷாரிக் என கூறப்படுகிறது. இவருக்கு பல பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயதான சுரேந்திரன் என்பவரின் ஆதார் அட்டையை பயன்படுத்திதான், ஷாரிக்கின் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. சுரேந்திரன், ஷாரிக்குடன் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் தமிழ்நாடு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குற்றஞ்சாட்டப்பட்டவர் மைசூர் நகரில் உள்ள லோகநாயகாநகரில்  வாடகை வீட்டை எடுத்து தங்கியுள்ளார் என தெரியவந்ததை அடுத்து,  போலீசார் இன்று அந்த வீட்டையும் சோதனையிட்டனர். அந்த வீட்டு உரிமையாளரிடமும் போலியான ஆவணங்களை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. 

அந்த வீட்டில் சில வெடிப்பொருள்களுடன், சர்கூட் போர்ட், சின்ன போல்ட்கள், பேட்டரி, ஒரு மொபைல் போந், இரண்டு போலி ஆதார் அட்டைகள், ஒரு போலி பான் அட்டை, ஒரு டெபிட் கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், இதன்மூலமே ஷாரிக் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர் என்ற முடிவுக்கு கர்நாடக போலீசாரும், அரசும் வந்துள்ளது. 

நான்கு அதிகாரிகள் சேர்ந்த விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், ஆட்டோ சாலையில் மறுபுறத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் ஆய்வு செய்தனர். 

கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”இப்போது உறுதியாகிவிட்டது. இது விபத்தல்ல, பயங்கரவாத செயலுக்கு தயாரானபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய அரசின் அமைப்புகளோடு இணைந்து இந்த ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.  

அப்பகுதியின் சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில், திடீரென ஆட்டோ தீ பிடித்து தெரிந்து, சிறிய அளவில் வெடித்துள்ள காட்சி பதிவாகியுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.  இது குண்டுவெடிப்பா என்று உறுதியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம், நேற்று மாலை 5 மணியளவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.