பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா குமாரின் ஆர்.டி.ஐ கோரிக்கைக்கு விவசாய அமைச்சகம் அளித்த தகவலின்படி, இந்தாண்டு மே-ஜூனில், 3.87 கோடி விவசாயிகள் மட்டுமே 11-வது தவணையாக இரண்டாயிரம் ரூபாயை தங்கள் கணக்குகளில் பெற்றுள்ளனர். இது, 2019-ல் முதல் தவணையைப் பெற்ற 11.84 கோடி விவசாயிகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க குறைவைக் காட்டுகிறது. ஆறாம் தவணையில் வீழ்ச்சி தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில் ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது தவணைகள் முறையே 9.87 கோடி, 9.30 கோடி, 8.59 கோடி, 7.66 கோடி, 6.34 கோடி என பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல் தவணை முறையே 2.6 கோடி, 1.09 கோடி, 63.13 லட்சம், 46.08 லட்சம், 37.7 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றிருக்கின்றனர். ஆனால், 2022-ம் ஆண்டு 11-வது தவணையில் இதே மாநிலங்களில் முறையே 1.26 கோடி, 37.51 லட்சம், 28.41 லட்சம், 23.04 லட்சம், 2 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றிருக்கின்றனர்.

இது குறித்து அகில இந்திய கிசான் சபா தலைவர் அசோக் தாவ்லே, “இந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த தரவுகளின்படி, 2022-ல் மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் பணம் பெறவில்லை. பயனாளிகளின் எண்ணிக்கையில் இவ்வளவு குறைவு ஏன் என்பதற்கு தர்க்கரீதியான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும் மத்திய அரசு இந்த திட்டத்தை மெதுவாக முடக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது” எனக் கூறியிருக்கிறார்.