உட்கட்சி மோதல் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என
தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது என்ன உத்தரவை பிறப்பிக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்தது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உற்சாகத்தை தந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வருமா, எதிராக வருமா, என்ன மாதிரியான முடிவு வந்தாலும் நாம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.