அறுவை சிகிச்சைக்கு விரைவில் தணிக்கை முறை கொண்டுவரப்படும்! மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

உலகில் பல்வேறு நாடுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு தணிக்கை குழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள். இந்த நடைமுறை தமிழகத்திலும் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நேற்று சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடுகளுக்கான ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் “டாக்டர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதை அரசு கவனமாக  கையாளும். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்தால் அவரின் குடும்பத்தினரின் வேதனையையும் வலியையும் பங்கிட்டு கொள்ள வேண்டியது அரசின் கடமை. 

அவருக்கு சரியான சிகிச்சை அளித்தாலும் ரத்தம் வெளியேறுவதை தவிர்க்க இறுக்கமாக போடப்பட்ட கட்டு உடனே அகற்றாமல் அலட்சியமாக இருந்ததே பிரியாவின் இறப்புக்கு காரணம். ஆனால் மாணவிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிந்ததும் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தற்பொழுது பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை துறை தலைவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துள்ளோம். அவர்களுடன் வரும் 23ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்பு அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விஷயங்கள் தேவையான கருவிகள் குறித்து தணிக்கை அறிக்கைகள் உருவாக்க உள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் உள்ள தணிக்கை நடைமுறைகளையும் ஆராய்ந்து அறுவை சிகிச்சைக்கான புதிய விதிகள் உருவாக்கப்படும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.