ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே காட்டு யானையை கொன்று விளை நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள கடூர் கிராமத்தில் காட்டு யானையை கொன்று விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனவர்கள் நேரில் சென்று விசாரித்தனர். மேலும், விவசாய நிலத்தில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு யானையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நிலத்தின் உரிமையாளரான எல்லப்பாவை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து யானையின் உடலை தோண்டி எடுப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மற்றும் ஊழியர்களை வரவழைத்தனர். ஆனால், உடல் புதைக்கப்பட்ட பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து கோயம்புத்தூரில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே இருட்டாகி விட்டதால் பாதுகாப்பு கருதி தோண்டும் பணியை நிறுத்திவிட்டனர்.