கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் தங்கியிருந்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை காந்திபுரம் பகுதியில் அவர் 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
அப்போது தனது அடையாளத்தை மாற்றி கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரி கொடுத்து அவர் தங்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் காந்திபுரத்தில் தங்கி இருந்த போது விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சிம் கார்டு மூலம் வாட்ஸ் அப் காலில் பேசி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அல்-கொய்தா அமைப்பின் சித்தாந்தங்களால் முகமது ஷாரித் கவரப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்த நிலையில், கோவையில் இது போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருக்கும் நபர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது.
newstm.in