சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் குறைந்த அளவில் பயன்படுத்தியுள்ளதால், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் 2020-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 2020 அக். மாதம் இத்திட்டம் அறிமுகமானது.
கரோனா பாதிப்பால் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், நாடு முழுவதும் 77 கோடி குடும்ப அட்டைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 7 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித் திருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு கடைகள்,நிறுவனங்களில் இதர மாநிலங்களைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே இதுவரை குடும்ப அட்டையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கியுள்ளனர். இந்த திட்டம் தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, பயன்பாடு குறைவாக இருப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் `இந்து தமிழ் திசை’யிடம் கூறியது:
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைஇல்லாவிட்டாலும் சில நேரங்களில் ஆதார், விரல்ரேகை பதிவின் மூலம்பொருட்கள் வாங்க வசதி உள்ளது.ஆனால், பொருட்களை வாங்கும்வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, உரியவிழிப்புணர்வு இல்லாததே காரணம். இதுதொடர்பாக, தமிழகம் வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமே நாங்கள் தெரிவித்தோம். மேலும், நானும், உணவுப் பொருள்வழங்கல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்லும் பகுதிகளில், வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் இதுபற்றி தெரிவிக்கிறோம்.
சிலர் இதுகுறித்து அறிந்திருந்தாலும், அவர்களது குடும்ப அட்டையை சொந்த மாநிலத்தில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதால், தமிழகத்தில் வாங்க இயலவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ரேஷன் கார்டு மூலம் பொருட்களை வாங்கும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
அதேபோல, ஒரு பகுதியைச் சேர்ந்தவர், வேறு பகுதியில் உள்ளகடைகளில் பொருள் வாங்கச் சென்றால், அனைத்து நாட்களிலும் பொருட்களை வழங்க வேண்டும். மறுக்கக் கூடாது என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.