கோவை: போலி ஆவணங்களைக் கொடுத்து, மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் தங்கிச் சென்றதன் எதிரொலியாக கோவையில் தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய முகமது ஷரீக் போலி பெயர், ஆவணங்கள், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து அறை எடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 3 நாட்கள் தங்கிச் சென்றுள்ளார். கோவை மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாட்ஜ்கள், விடுதிகள், ஹோட்டல்களுடன் கூடிய தங்குமிடங்கள், மேன்ஷன்கள் உள்ளன. இங்கு முகமது ஷரீக் போலி ஆவணங்களைக் கொடுத்து தங்கிச் சென்றதைத் தொடர்ந்து, மேற்கண்ட தங்கும் விடுதிகளுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகரில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்களுடன் கூடிய தங்குமிடங்கள், மேன்ஷன்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், மேலாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முடிவில், தங்கும் விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, மாநகரில் உள்ள மேற்கண்ட 4 வகைகளாக உள்ள தங்கும் இடங்களில் சிலவற்றில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே, இந்த கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும், அதன் காட்சிகளை குறிப்பிட்ட நாட்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
தங்க வருபவர்களிடம் பெயர், ஆதார் கார்டு அல்லது ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையின் நகல், அவர்களின் செல்போன், முழுமையான முகவரி ஆகியவற்றை கட்டாயம் வாங்கி சேகரித்து வைத்திருக்க வேண்டும். அசல் ஆவணத்தை சரிபார்த்து நகலை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுத்து அது அவர்களுடையதா எனவும் உறுதி செய்ய வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது வந்து தங்கினால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் பட்டியலை அவ்வப்போது காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்: கோவையில் கடந்த மாதம் 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஆன்லைன் மூலமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்களை உயிரிழந்த நபர் உள்ளிட்டோர் வாங்கியிருந்தனர். அதேபோல், கடந்த 19-ம் தேதி மங்களூருவில் நடந்த ஆட்டோ குண்டு வெடிப்பிலும் தொடர்புடைய ஷரீக் ஆன்லைன் மூலமாக குண்டுகள் தயாாிக்க வேதிப்பொருட்களை வாங்கியுள்ளார். இச்சம்பவங்களைத் தொடர்ந்து அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மேலாளர்களுக்கு, ஆன்லைன் மூலம் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படும் பொருட்களை ஆர்டர் செய்தால், அது தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.