தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை உருவாக்கும் ஏற்பாடுகள் ( Campaign Finance bill) தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபகக்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்…..
சமூகத்திற்கும் நாட்டிற்கு, நேர்மையாக,பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதில்இ சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான சந்தர்ப்பங்களை மக்கள் இழக்கின்றனர். விசேடமாக, அதிகமாக பணம் செலவளித்து தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அதிகம் பயன் பெறுகின்றனர். இந்த பணம் யாருடையது, எந்தவகையில் கிடைக்கப்பபெற்றவை என்பது தொடர்பான தெளிவு பொதுமக்களுக்கு இல்லை. மக்கள் தவறாக வழிநடாத்தப்படுவதனால் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இனி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பன இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக எவ்வளவு தொகையை செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும். இதனை அனுமதிக்கும்போது தேர்தலின் தன்மை, அவர்கள் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேசத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில்கொண்டு நியாயமான தொகையொன்றை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு.
எவரேனும் வேட்பாளர் ஒருவர், இந்த தொகைக்கு மேலதிகமாக செலவு செய்தமை, நிரூபிக்கப்பட்டால் அவரது பதவி பறிபோக இடமுண்டு. அந்தந்த சட்டங்களின் அறிவுறுத்தல்களின்படி அபராதங்களை விதிக்கவும் அதிகாரம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச சொத்துக்கள், அரச வாகனங்கள், அரச வளங்கள் மற்றும் அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கும், பல்வேறு குழுக்கள், தேசிய அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பண உதவிகளை பெறுவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், தேர்தல் முடிந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர் எவ்வளவு பணம் செலவு செய்துள்ளார், அவை எந்த வகையில் கிடைக்கப் பெற்றன என்பது குறித்த முழுத் தகவலையும் பிரமாணப் பத்திரம் ஒன்றினூடாக முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.. இந்தச் சட்டத்தின் கீழ், உண்மைக்குப்புறம்பான தகவல்களை வழங்கினால், அது குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
எனவே சிறந்ததொரு ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கு, அந்த சிறந்த ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் பணியாற்றக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் நடைமுறை தேவை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.