மங்களூரு கர்நாடக மாநிலம், மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக், கோவை குண்டு வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினுக்கு உதவியதும், நாடு முழுதும் தாக்குதல் நடத்துவதற்கானசதி திட்டத்தில் ஈடுபட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில், இவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும்நபர்களிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் மூளையாகசெயல்பட்டு, தலைமறைவானவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசுவழங்குவதாக என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பம்ப்வெல் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது ஷாரிக், 24, ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், 60, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஷாரிக்கின் வளர்ப்பு தாய், சித்தி, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று மங்களூரு பாதர் முல்லா மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்; அவரை அடையாளம் கண்டு, உறுதி செய்தனர். பத்திரிகையாளர்களிடம், ‘அனைத்து விஷயங்களையும் போலீசார் கூறுவர்’ என கூறிச் சென்றனர்.
7 இடங்களில் ‘ரெய்டு’
இதையடுத்து, தீர்த்தஹள்ளியில் உள்ள ஷாரிக்கின் வீடு, உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில், 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், மாநில போலீசாருடன், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பினர், ஷிவமொகாவில் நான்கு, மைசூரில் இரண்டு, மங்களூரில் ஒன்று என ஏழு இடங்களில் நேற்று சோதனை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர்.
இதற்கிடையில், ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த முகமது ராஹுல்லா, 32, என்பவர் கே.ஜி.ஹள்ளியில் நேற்று கைது செய்யப்பட்டு, மங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.
வெடிபொருட்கள்
மைசூரில் ஷாரிக் தங்கியிருந்த லோக்நாயக் நகரில் இருந்த வீட்டில் போலி ஏ.கே., 47 ரக துப்பாக்கி, 150 தீப்பெட்டிகள், வெடி பொருட்கள், பிளாஸ்டிக் துண்டுகள், மடிக்கணினி, இரும்பு துகள்கள், சல்பர் துகள்கள், பேட்டரிகள், அலுமினியம் பைல், சிம்கார்டுகள், மெக்கானிக் டைமர், போலி ஆதார் அட்டை, மொபைல் போன் ‘டிஸ்பிளே’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்.ஐ.ஏ., விசாரணையில், ஷாரிக் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கு முன், பல முறை வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்து உள்ளது. பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தி பயங்கரவாத செயல் புரியவிருந்த வேளையில், லேசான பாதிப்புடன் முடிந்துஉள்ளது.இதற்கிடையில், கர்நாடக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று முன்தினம் மங்களூரு வந்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
![]() |
நேற்று அவர் கூறியதாவது:
மைசூரில் மோகன்குமார் என்பவரது வீட்டில், ஒரு மாதமாக ஷாரிக் வாடகைக்கு தங்கியுள்ளார். அந்த வீட்டில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவற்றை ‘ஆன்லைன்’ மூலம் சிறிது சிறிதாக வாங்கி சேர்த்துள்ளார். குக்கர் குண்டு தயாரித்து, சமூக வலைதளங்களில் பயங்கரவாதி போன்று, ‘போஸ்’ கொடுத்துள்ளார்.செப்டம்பர் 8ம் தேதி மங்களூரு வந்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நோட்டமிட்டு சென்றுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.
கடந்த 19ம் தேதி, மைசூரில் இருந்து புறப்பட்ட ஷாரிக், ஹுன்சூர், மடிகேரி, புத்துார், பி.சி., சாலை மார்க்கமாக, மங்களூருக்கு பஸ்சில் வந்து உள்ளார்.பின், ஆட்டோவில் ஏறி பம்ப்வெல் பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது, குக்கரில் குண்டு வெடித்துள்ளது. இதன் மூலம் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்கப்படும். குண்டு தயாரிப்பதில் ஷாரிக் தேறியவராக தெரியவில்லை. எனவே தான், ஆட்டோவிலேயே வெடித்துள்ளது.
கோவை தொடர்பு
ஷாரிக் போலி அடையாள அட்டை தயாரித்து, தமிழகத்தின் கோவைக்கு சென்றுள்ளார். அக்., 23ல் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் இறந்த பயங்கரவாதி முபினுக்கு உதவி புரிந்துள்ளார். தீர்த்தஹள்ளியின் அப்துல் மதீன் என்பவர், இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளார்.
அவர் குறித்து துப்பு வழங்குபவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது. இவர்கள் நாடு முழுதும் தாக்குதல் நடத்துவதற்காக சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து உள்ளது.சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். ஷாரிக் சிகிச்சையில் குணம் அடைந்ததும் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பயணம்
கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாதி; ஏற்கனவே என்.ஐ.ஏ.,வால் விசாரிக்கப்பட்டவர். அதுபோலவே, குக்கர் குண்டு வைத்த ஷாரிக், அல் – குவைதா ஆதரவு பயங்கரவாதி என்பதும், போலீஸ், உளவு அமைப்பினரால் விசாரிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்து உள்ளது.இந்தாண்டு செப்., மாதத்தில் கோவை வந்த ஷாரிக், காந்திபுரத்தில் மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியுள்ளார்.
அதன்பின் மதுரை சென்றவர், அங்கு ஒரு நாளும், நாகர்கோவிலில் இரு நாட்களும் தங்கியுள்ளார். அதன்பின், கேரளா சென்று ஆலுவா நகரில் ஒரு வாரம் தங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ரகசிய அமைப்பு
அவர், ‘பேஸ் மூவ்மென்ட்’ என்ற ரகசிய அமைப்பை சேர்ந்தவர் என்று கண்டறிந்துள்ள போலீசார், தன் பயணத்தின்போது அந்த அமைப்பில் ஈடுபாடு கொண்டவர்களை சந்தித்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.அந்த வகையில், கோவை, மதுரை, நாகர்கோவில், ஆலுவா ஆகிய இடங்களில், பேஸ் மூவ்மென்ட் ரகசிய அமைப்புடன் தொடர்புடையவர்கள் யார், அவர்கள் ஷாரிக் வருகையின்போது எங்கிருந்தனர், நேரில் சந்தித்தனரா என்று, போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தனிப்படை வருகை
குக்கர் குண்டு வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக, மங்களூருவில் இருந்து நான்கு பேர் கொண்ட தனிப்படை போலீசார் கோவை வந்துள்ளனர். ஷாரிக் தங்கியிருந்த விடுதி, அவர் சந்தித்த நபர்கள், அவருக்கும், கார் குண்டு வெடிப்பின் ஜமேஷா முபினுக்கும் தொடர்பு உள்ளதா என்று மங்களூரு போலீசார் விசாரிக்கின்றனர்.அதுபோல, கோவையில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் மங்களூரு சென்றுள்ளனர்.
கோவையில் ஷாரிக் தங்கியிருந்த விடுதியில், ஒரே அறையில் தங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன்,ஊட்டி போலீஸ் கஸ்டடியில், தொடர்ந்து விசாரிக்கப்பட்டார்.
சிங்காநல்லுார் தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலை பார்த்த அவர், காந்திபுரத்தில் அவ்வப்போது அறை எடுத்து தங்குவது வழக்கம். அப்படி தங்கி இருந்தபோது, கவுலி அருண்குமார் என்ற போலியான பெயரில் தங்கியிருந்த ஷாரிக் அறிமுகம் ஆகியுள்ளார்.
அவரிடம் போன் இல்லாததை கவனித்த சுரேந்திரன் விசாரித்துஉள்ளார்.
‘என்னிடம் ஆதார் அட்டை இல்லாததால், ‘சிம்’ கார்டு பெற முடியவில்லை’ என்று ஷாரிக் கூறியதால் இரக்கப்பட்ட சுரேந்திரன், தன் ஆதார் மூலம் சிம் கார்டு பெறுவதற்கு உதவியுள்ளார்.
இந்நிலையில், சுரேந்திரன் நேற்று மதியம் மங்களூரு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். மங்களூரில் ஷாரிக்கையும், சுரேந்திரனையும் நேருக்கு நேர் வைத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., – டி.ஐ.ஜி., வந்தனா தலைமையிலான குழுவினர் தான், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கையும் விசாரிக்கின்றனர்.
விடுதி மூடல்
கோவைக்கு செப்., மாதம் வந்த முகமது ஷாரிக், காந்திபுரத்தில் மதி மகிழ் வியன் அகம் என்ற விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்.விடுதி உரிமையாளர் காமராஜ் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ‘சிசிடிவி’ காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை.
போலீசார் கூட்டம் கூட்டமாக வந்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அதில் தங்கி இருந்தவர்கள் அறைகளை காலி செய்து வெளியேறினர். தற்போது விடுதி பூட்டப்பட்டுள்ளது.
‘ஹை அலெர்ட்’ அறிவிப்பு
மங்களூரு குண்டுவெடிப்பை அடுத்து கர்நாடகா முழுதும், ‘ஹை அலெர்ட்’ அறிவிக்கப்ப ட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்கள், முக்கிய கட்டடங்கள் உட்பட பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மங்களூரு விமான நிலையம், துறைமுகம் பகுதியில் அதிக அளவில் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஷாரிக் பின்னணி என்ன?
கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகா, சொப்பு குட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஷாரிக், 27. இவரது தாய், சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஷபானா பானு, என்பவர் வளர்த்துள்ளார். பி.காம்., படித்து, தீர்த்தஹள்ளியில் உள்ள தந்தையின் துணிக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் தந்தை காலமான தால், கடையை தனியாக நடத்தி வந்தார்.’வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக், மெசஞ்சர்’ மூலம் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து உள்ளார்.
இவர் மீது, மங்களூரின் கிழக்கு, வடக்கு போலீஸ் நிலையங்களிலும்; ஷிவமொகா ஊரக போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகியுள்ளன. மங்களூரு நீதிமன்றத்தில் பயங்கரவாத ஆதரவு கோஷம் எழுதியதும் ஷாரிக் தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
ஐ.எஸ்., பயங்கரவாதிகளை தொடர்பு கொண்டு, ஏ.கே., 47 துப்பாக்கி வாங்க முயற்சித்துள்ள தகவல், அவரது ‘வாட்ஸ் ஆப்’பில் தெரிய வந்துள்ளது.
அந்த இருவர் யார்?
ஆட்டோவில் ஏறுவதற்கு முன், நாகுரி என்ற இடத்தில் ஒரு ஒயின்ஷாப்பில் ஷாரிக் மது அருந்தியுள்ளார். அவருடன் மேலும் இருவர் இருந்துஉள்ளனர். அப்போது, ஒன்றன் மீது ஒன்று என மூன்றுடி – ஷர்ட்கள் அணிந்திருந்தார். ஆனால், ஆட்டோவில் அவர் மட்டுமே ஏறினார். மற்ற இருவர் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து, அங்கு பதிவான ‘சிசிடிவி’ காட்சிகள் மூலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
‘சதி குறித்து விசாரணை’
”குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. ஷாரிக் எந்தெந்த ஊர்களுக்கு சென்றார் என்றதகவலும் கிடைத்துள்ளது.இதுவரை கர்நாடக போலீசாருக்கு கிடைத்த அனைத்து தகவலும், என்.ஐ.ஏ., மற்றும் மத்திய உளவு துறைக்கும் வழங்கப்பட்டுள்ளன.
எந்தெந்த இடத்தில் குண்டு வெடிக்க சதி திட்டம் தீட்டினார்; எந்தெந்த சம்பவங்களில் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்