`பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசு, டேன்டீயை எப்படி நடத்தும்?' – கே.பாலகிருஷ்ணன்

தாயகம் திரும்பிய தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘டேன்டீ’ எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தின் சில பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை தற்போதைய திமுக அரசு எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நீலகிரி மாவட்டம், கூடலூரில் டேன்டீக்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்று பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “டேன்டீ நிறுவனத்தை தமிழக அரசால் லாபகரமாக நடத்த முடியவில்லை என்றால் எழுதிக் கொடுத்துவிடுங்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூலம் நிர்வகித்து இந்த நிறுவனத்தை லாபத்தில் இயக்கி காட்டுவோம்” எனக் கூறியிருந்தார். அவரின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலக கட்டட நிதி அளிப்பு கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், மாநில உரிமைகளைப் பறித்தல், விலைவாசி உயர்வு, பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி ஆட்சி நடத்துவது, இந்தித் திணிப்பு போன்றவற்றை எதிர்த்து டிசம்பர் மாத கடைசி அல்லது ஜனவரி மாதத்தில் மண்டல அளவில் மிகப்பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது.

கே. பாலகிருஷ்ணன்

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவு சரியானது அல்ல. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத்துறையின் பெரும் பகுதி தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. லாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களையே நடத்த முடியாத மத்திய அரசு, டேன்டீ நிறுவனத்தை எப்படி நடத்த முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.