மகளிர் உதவி மையம் சார்பில் ‘பெண்ணியம் போற்றுவோம்’ விழிப்புணர்வு – நவ.25 முதல் டிச.10 வரை நடக்கிறது

சென்னை: தமிழக அரசின் ‘181’ மகளிர் உதவி மையம் சார்பில் நவ.25 முதல் டிச.10-ம் தேதி வரை ‘பெண்ணியம் போற்றுவோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் ‘181’ மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம், குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் துறை, மருத்துவத் துறை, சட்ட உதவி, மனநல ஆலோசனை வழங்கப்படுகின்றன.

‘181’ இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் இதில் கேட்டறியலாம்.

இந்நிலையில், நவ.25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி ‘பெண்ணியம் போற்றுவோம் 2022′ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ‘181’ மகளிர் உதவி மையம் சார்பில், உதவி மையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நவ.25 முதல் டிச.10 வரை நடத்தப்படுகிறது.

இதில், திரைப்பட விழா, மகளிர் உதவி மையத்தின் விழிப்புணர்வு பயிலரங்கம், சைக்கிள் பேரணி, மணல் சிற்பக்கலை, ஆன்லைன் வழியே கருத்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், ‘181’ மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் அதன் இயக்குநர் மெரின் ஆகியோர் நேற்று சந்தித்து, ‘பெண்ணியம் போற்றுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.