நாகர்கோவில்: மங்களூரு குண்டு வெடிப்பில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக், நாகர்கோவிலில் 4 நாள் தங்கி இருந்ததாக கூறப்படுவதால் அங்குள்ள லாட்ஜ்களில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவருடன் செல்போனில் பேசியதாக சிக்கிய வாலிபர் 30 மணி நேர விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பில் சிக்கிய முகமது ஷாரிக், கடந்த ஆகஸ்ட் இறுதியில் நாகர்கோவில் வந்ததாகவும், 4 நாட்கள் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், நாகர்கோவிலில் இருந்து கேரளா சென்றுள்ளார். நாகர்கோவிலில் அவர் யார், யாரை சந்தித்தார் என்பது பற்றி தற்போது உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது செல்பானை ஆய்வு செய்த போது, நாகர்கோவிலில் இருந்த 4 நாட்களும் வேறு யாருடனும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால், முகமது ஷாரிக் எதற்காக நாகர்கோவில் வந்தார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் முகமது ஷாரிக் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கோவையில் முகமது ஷாரிக் சென்ற நிலையில், அங்கு கடந்த மாதம் ஆட்டோவில் சிலிண்டர் வெடித்தது.
இந்த நிலையில் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது. தற்போது நாகர்கோவில் வந்து சென்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், உளவு பிரிவு போலீசார் நாகர்கோவிலில் முகாமிட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி லாட்ஜ்களில் முகமது ஷாரிக் தங்கியிருந்தாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முகமது ஷாரிக் செல்போனுக்கு, நாகர்கோவிலில் பாஸ்ட்புட் கடையில் பணியாற்றும் அசாம் மாநில வாலிபர் செல்போனில் பேசியது தெரிய வரவே, கடந்த 20ம்தேதி இரவு அந்த நபரை, போலீசார் பிடித்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர் பாஸ்ட்புட் கடை உரிமையாளரின் மனைவி, தனியார் வங்கியின் மேலாளராக உள்ளார்.
அவரது செல்போனுக்கு, கடந்த செப்டம்பரில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் இந்தியில் பேசியதால் அவருக்கு எதுவும் புரிய வில்லை. பின்னர் தன்னிடம் இது குறித்து கூறியதை தொடர்ந்து தனது செல்போனில் இருந்து அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். இது தொடர்பாக 30 மணி நேர விசாரணைக்கு பின் அசாம் நபரை, போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் விடுவித்தனர். சொந்த மாநிலத்துக்கு செல்லக்கூடாது. விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
* கோவையில் மாற்று பெயரில் தங்கியிருந்தது கண்டுபிடிப்பு
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் சிக்கிய முகமது ஷாரிக் கோவையில் தங்கியிருந்தபோது, ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் உதவியுடன் சிம்கார்டு வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் முகமது ஷாரிக் தனது பெயரை அருண்குமார் எனக்கூறியதாக தெரிவித்தார். லாட்ஜ் பதிவேடு மற்றும் பல்வேறு இடங்களில் இவர் அருண்குமார் என்ற பெயரில் போலி ஆவணங்களை காட்டி தங்கியிருந்துள்ளதாக கூறப்படுகிறது. காந்திபுரம் லாட்ஜில் செப்டம்பர் மாதம் 3 நாட்கள் அவர் தங்கியிருந்தார். அப்போது தனியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கோவையில் பல்வேறு வழிபாட்டு தலங்கள், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களுக்கு சென்று வந்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
முகமது ஷாரிக் தனது செல்போனில் ஈஷா யோக மையத்தின் ஆதியோகி சிலையை வாட்ஸ் அப் படமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
இவர் ஈஷா மையம் சென்று வந்தாரா? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருக்கிறார்களா? என அவரது செல்போன் பதிவில் உள்ள பெயர் பட்டியலை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை நகரில் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை சார்ந்த 2 ஆயிரம் பேர் சந்தேக பட்டியலில் இருக்கிறார்கள். சில அமைப்புகள் முடக்கப்பட்ட நிலையில், முகமது ஷாரிக் யாரை சந்தித்தார், எந்த அமைப்பிற்கு அவர் ஆதரவாக இருந்தார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டல், லாட்ஜ், மேன்சன்கள் இருக்கிறது. சிலர், எந்த அடையாள அட்டையும் இல்லாமல் தங்கியிருப்பதாக தெரிகிறது. அடையாளமில்லாத நபர்களின் பட்டியல் சேகரிப்பு பணி நடக்கிறது.