தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் ரூ70.61 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி முறையில் தனி நபருக்கு பெயர் மாற்றம் செய்ததாக வருவாய் துறை அதிகாரிகளாக பணிபுரிந்த ஜெயப்பிரதாப், ஆனந்தி உட்பட 14 பேர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக கைது செய்யப்பட்ட 14 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் சிபிசிஐடி புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான 14 பேரில் 7 பேர் நிபந்தனை ஜாமினில் விடுதலையானார்கள்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறுகையில் “தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, தேனி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் தாலுகாக்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. சராசரியாக ஒவ்வொரு தாலுகாவிலும் 12 சதவீத அரசு புறம்போக்கு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளதால் பல அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டிபட்டி தாலுக்கா வருசநாடு பகுதியில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தின் காப்புக்காடுகள் சுமார் 335 ஏக்கர் நிலம் தனிநபருக்கு வகை மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி தனியார் எஸ்டேட்டாக உருமாறி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் உயர் அதிகாரி ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தாசில்தார் அதிகபட்ச அரசியல் அழுத்தம் காரணமாக ‘அ’ பதிவேடு திருத்தம் செய்து நில வகை மாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் இந்த விவரங்களை நீதிமன்றத்தில் முறைப்படி அறிக்கை வாயிலாக தாக்கல் செய்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடன் வனத்துறை நிலங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த முக்கிய அரசியல்வாதி யார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.