குவஹாத்தி, அசாம் – மேகாலயா எல்லையில், மரக்கடத்தலால் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, நேற்று வனக்காவலர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்ட வனப்பகுதியில் இருந்து, கடத்தல்காரர்கள் நிறைய மரங்களை வெட்டி லாரியில் வைத்து கடத்தினர்.
இவர்களை, மேகாலயா எல்லையில் வைத்து அசாம் போலீசார் தடுத்தனர். ஆனால், அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. உடனே, போலீசார் லாரியின் டயரை சுட்டு டிரைவர் மற்றும் இன்னொரு நபரை பிடித்தனர்; மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்தனர்.
இதையடுத்து, மேகாலயா பகுதியில் இருந்து ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு கத்தியுடன் திரண்டனர்.
கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தியதுடன், வனத் துறையினர் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு, வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இது குறித்து, அம்மாவட்ட எஸ்.பி., இம்தாத் அலி தெரிவித்ததாவது:
இந்த வன்முறையில், அசாம் வனக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். வன்முறை நிகழ்த்தியவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இவர்கள், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனரா அல்லது ஒருவரையொருவர் தாக்கியதில் உயிரிழந்தனரா என தெரியவில்லை.
இதையடுத்து, மேகாலயா எல்லையில் உள்ள அசாம் மாநில போலீஸ் ஸ்டேஷன்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதலையடுத்து, மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய வசதி துண்டிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ௧௯௭௨ல், அசாமில் இருந்து, மேகாலயா பிரிக்கப்பட்டது. அதுமுதல், எல்லையில் உள்ள ௧௨ பகுதிகளை பிரித்துக் கொள்வதில், இரண்டு மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், மார்ச் மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், புதுடில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஆறு பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஆறு பகுதிகளுக்கான பிரச்னையை தீர்க்க பேச்சு துவக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் வெடித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்