அரசு கேபிள் டிவி சேவை முடக்கம்: `தனியார் நிறுவனங்கள் செய்யும் சதியா?’ – கொதித்த கேபிள் ஆபரேட்டர்கள்

தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2007-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை புகுத்தினார். பின்னர் 2017-ல் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரசு டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
பல்வேறு தனியார் நிறுவனங்களின் செட் டாப் பாக்ஸ்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் கடந்து கேபிள் இணைப்புகளுக்கு செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் உள்ள 24 லட்சம் கேபிள் இணைப்புகளுக்கு மட்டுமே செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இந்த செட் டாப் பாக்ஸ்களை மாற்றித் தராமலும், கேபிள் நெட்வொர்க்கில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்யாமலும் உள்ள நிலையில், கடந்த 5 நாள்களாக தமிழகம் முழுவதும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து கேபிள் ஒளிபரப்பு முடங்கியுள்ளதால் கேபிள் ஆபரேட்டர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கேபிள் ஒளிபரப்பில் உள்ள குளறுபடியை அகற்றக்கோரி கேபிள் ஆபரேட்டர்கள் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அருள் முருகன்

இதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அருள் முருகன் நம்மிடம் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட் டாப் பாக்ஸ்களுடன் 24 லட்சம் கேபிள் இணைப்புகள் இயங்கி வருகின்றன. அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் பெற்றுள்ளவர்களுக்கு கடந்த 5 நாள்களாக கேபிள் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது. கேட்டால் சர்வரில் கோளாறு இருப்பதால் ஒளிபரப்புவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறுகிறார்களே தவிர என்ன பிரச்னை உள்ளது என்பதை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறுவதில்லை. சர்வரில் பிரச்னை வந்தால் அதிகபட்சம் 1 மணி நேரத்துக்குள் சரி செய்து விடமுடியும். முந்தைய ஆட்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் இருந்தபோதும், அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட குறிஞ்சி சிவகுமார் தலைவராக இருந்த சமயத்திலும் சர்வர் பிரச்னை வந்தபோது ஒரே மணி நேரத்தில் சரி செய்து தரப்பட்டது.

ஆனால் தற்போது ஏதேதோ காரணங்களைக் கூறி ஒளிபரப்பில் உள்ள பிரச்னையை சரி செய்யாமல் தாமதப்படுத்துகிறார்கள்.
இதன் காரணமாக எங்களிடம் கேபிள் இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் ஆவேசப்படுகிறார்கள். மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. தினமும் 50 பேருக்கும் மேல் எங்களிடமிருந்து கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு டிடிஹெச் இணைப்புக்கு மாறி வருகின்றனர். இது தனியார் கேபிள் நிறுவனங்கள் செய்யும் சதியா, டிடிஹெச் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா என்பது குழப்பமாக இருக்கிறது. இந்நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிவிப்பில் சர்வர் பிரச்னைக்கு காரணமான ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சர்வர் பிரச்னையை சரி செய்யாமல் அந்த நபரை கைது செய்வதாகக் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று டிஜிட்டல் செட் டாப் பாக்ஸை இலவசமாக பொருத்தித் தருவதாகக் கூறி களம் இறங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனத்திடம் 6 லட்சம் இணைப்புகள் உள்ள நிலையில், இவர்கள் அட்வான்ஸ்டு செட் டாப் பாக்ஸை இலவசமாக வழங்கும்பட்சத்தில் எங்கள் தொழில் பாதாளத்துக்கே போய் விடும் அபாயம் உள்ளது.

அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள செட் டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக  டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்குமாறு கடந்த 3 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால் அரசு இதனை கண்டுகொள்ளவே இல்லை.டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ்களுக்கு கடந்த 27 மாதங்களாக அரசுத் தரப்பில் இருந்து கேபிள் நிறுவனத்துக்கு சேவைக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நாங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை நிலுவையின்றி செலுத்தி விடுகிறோம். அப்படி இருந்தும் எங்களுக்கு தரவேண்டிய இணைப்பை வழங்காததால் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு கேபிள் தொழிலை நம்பியுள்ள சுமார் 25 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு கேபிள்

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, அம்முறையிலும் இச்சிக்கலுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது, மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

 இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கேபிள் ஆபரேட்டர்கள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த தற்காலிக பிரச்னையை சீரமைக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.