அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லையையொட்டிய, அஸ்ஸாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போகாஜன் அருகே லஹோரிஜான் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதாகவும், வீடுகள், கடைகள் உட்பட ஒரு நான்கு சக்கர வாகனம், மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படும் அதேவேளையில், இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியாகக் கண்டறியவில்லை.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போகாஜன் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) ஜான் தாஸ், “தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். தீ விபத்தில் குறைந்தது 100 வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்திருக்கின்றன.

இருப்பினும் இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.