ஆளுநரே திமுகவை தட்டிக்கேளுங்கள் – எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். அப்போது ஆளுநரிடம்தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, தமிழக அரசில் நடைபெறும் வரும் ஊழல், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்தார். இந்தச் சந்திப்பின்போதுகே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத் துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல் துறை முறையாக விசாரணை செய்யவில்லை.

தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது.

அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற அரசாங்கம்தான் காரணம். உள்ளாட்சி பணிகளை விளம்பரப்படுத்த ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.7,900 செலவிட்டுள்ளனர். உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆளுநரை திமுக விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர்தான் திமுகவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.