சென்னை: தமிழக அரசுக்கு எதிராக புகார்களை தெரிவிப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி, இன்று பகல் 12.45 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்திக்க உள்ளார். முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் கடந்த வாரம் முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், அங்கு சென்று பார்வையிட்ட பழனிசாமி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்தான் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதுதவிர, அதிக அளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் ஆய்வு செய்ததுடன், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார். அத்துடன், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வெளியிட்டிருந்தார்.
இதுதவிர, திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டவை என்ற குற்றச்சாட்டினையும் அவ்வப்போது அவர் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், பழனிசாமிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் கோடநாடு எஸ்டேட் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளை தமிழக அரசு விரைவுபடுத்தி வருகிறது. இதுதவிர, எதிர்தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், தனது தரப்பில் நிர்வாகிகளை முழுமையாக நியமித்து, பொதுக்குழுவை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இன்று பகல் 12.45 மணிக்கு சந்திக்கிறார். அப்போது, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் செல்ல உள்ளதாகவும், சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் பழனிசாமி தெரிவிப்பார் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.