யானை வழித்தடங்களை ஈஷா யோகா மையம் அடைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது?’ என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி, சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடமாகும். யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுகிறது. இது அந்தப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 150-க்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. யானைகள் தாக்கியதில் சுமார் 160-க்கு மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர்.

ஈஷா மையத்தில், இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சினிமா நடிகர்கள் சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளின்போது, அதிக டெசிபல் அளவிலான ஒலியால் அப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதோடு, வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுகிறது. எனவே ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் என்னையும் எதிர்மனுதராக சேர்க்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.