அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை… சாத்தூர் குழந்தைக்கு நடந்தது என்ன? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி அஜித்குமார் – கார்த்திகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு நாக்கிற்கு அடியில் சுவாசப் பாதைக்கு அருகே நீர்க்கட்டி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அகற்றியுள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகும் நிலையில் மீண்டும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அங்கு குழந்தையின் நாக்கிற்கு அடியில் நீர்க்கட்டி இருந்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சரிசெய்துள்ளனர். ஆனால் சிறுநீர் பாதையில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்து விட்டதாக குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் மதுரை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில ஊடகங்களிலும் தவறான அறுவை சிகிச்சையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன நடந்தது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, விருதுநகரை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணிற்கு கவின் என்ற ஆண் குழந்தை ஓராண்டிற்கு பிறந்தது. அதற்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் நாக்கிற்கு அடியில் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு நீர்க்கட்டி இருந்துள்ளது.

அதை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிவிட்டோம். ஆனால் ஓராண்டு கழிந்த நிலையில் மீண்டும் நாக்கிற்கு அடியில் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். இதையடுத்து பெற்றோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தனர். முறையாக ஆராய்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மயக்க மருந்து கொடுத்து சரியான வழிமுறைகளுடன் சிகிச்சை அளிக்க தொடங்கினோம். அப்போது குழந்தைக்கு சிறுநீர் கழிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இதனால் சிறுநீர்ப்பை நிரம்பி வயிறு கட்டிக் கொண்டது. உடனே சிறுநீர்ப் பாதையை ஆராய்ந்து பார்த்ததில் முன் தோல் ஒட்டிக் கொண்டிருந்தது. உடனே அதற்கான அறுவை சிகிச்சையும் மருத்துவர்களால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

சுவாசப் பாதையிலும் பிரச்சினை தீர்ந்தது. தற்போது அந்த குழந்தை எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நலமாக இருக்கிறது. நல்ல முறையில் சாப்பிடுகிறது. சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சினையில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் தந்தை தவறுதலாக புகார் அளித்ததாக தெரிய வருகிறது. இப்படி அவசரப்பட்டு மருத்துவர்களுக்கு எதிராக புகார் அளிக்கத் தொடங்கினால்,

வருங்காலத்தில் நோயாளிகளின் நல்லதுக்காக செய்யும் எந்த விஷயத்தையும் முன்னெடுக்க மருத்துவர்கள் தவிர்த்து விடுவர். இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். எனவே குழந்தைக்கு என்ன பிரச்சினை இருந்தது? அதற்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? தற்போது எந்த நிலையில் இருக்கிறது? போன்ற விஷயங்களை முறையாக சரிபார்த்து, அதன்பின்னர் விசாரித்து விட்டு செயல்படுவது நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.